

நடிகை சமந்தா தனது ட்ரலலலா மூவிங் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் மூலம் தயாரிக்கும் படம், ‘மா இன்டி பங்காரம்’.
நந்தினி ரெட்டி இயக்குகிறார். இவர்கள் இருவரும் ‘ஜபர்தஸ்த்’, ‘ஓ பேபி’ ஆகிய படங்களில் பணிபுரிந்திருந்தனர். இப்போது மீண்டும் இணைந்துள்ளனர். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட இப்படத்தில் இந்தி நடிகர் குல்ஷன் தேவய்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் ‘காந்தாரா: சாப்டர் 1’ படத்தில் வில்லனாக நடித்தவர்.
அவர் கூறும்போது, “முதல் முறையாக சமந்தாவைச் சந்தித்ததும் எங்கள் ஜோடி நன்றாக இருக்கும் என்று தோன்றியது. இதை சமந்தாவிடமும் சொன்னேன். மற்றவர்களின் உழைப்பை மதித்துப் பாராட்டக்கூடியவர் அவர். நான் நடித்துள்ள ‘கன்ஸ் அண்ட் குலாப்ஸ்’ உள்ளிட்ட சில படங்களில் என் நடிப்பை ரசித்ததாகச் சொன்னார். மகிழ்ச்சியாக இருந்தது.
இந்த படத்துக்கு அழைத்தபோது, ‘இது தெலுங்குப் படம், உங்களுக்குச் சம்மதமா?’ என்று சமந்தா கேட்டார். நான் சம்மதித்தேன். எனக்குக் கொஞ்சம் தெலுங்கு தெரியும், சரளமாகப் பேச முடியாது; அதனால் எனக்கு மொழிப் பயிற்சியாளர் தேவை என்று சொன்னேன். ஏற்றுக்கொண்டார். இதன் படப்பிடிப்பை சமீபத்தில்தான் நிறைவு செய்தேன்” என்றார்.