

ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாணின் முன்னாள் மனைவி ரேணு தேசாய், ‘வீழ்ந்து கிடப்பவரை எட்டி உதைப்பது மனிதாபிமானமற்ற செயல்’ என பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது இந்தப் பதிவு பவன் கல்யாண் தனது மனைவி அன்னா லெஸ்னவாவை பிரிவதாக அறிவிப்பு வெளியான நிலையில் வெளியாகி உள்ளது.
பவன் கல்யாணின் இரண்டாவது மனைவியும், நடிகையுமான ரேணு தேசாய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், “ஒருவர் கடினமான காலகட்டத்தைக் கடந்து கொண்டிருக்கும்போது, அவரை மேலும் விமர்சிப்பது தார்மிக ரீதியாக சரியாக இருக்காது. ஏற்கெனவே கீழே விழுந்து கிடப்பவரை எட்டி உதைப்பது மனிதத் தன்மை இல்லாத செயல்.
அவர்கள் என்ன நிலையில் இருந்தாலும் அவர்களும் மனிதர்கள்தான் என்பதை நாம் ஒருபோதும் மறக்கக் கூடாது. அவர்கள் யாரோ ஒருவரின் குழந்தையாகவோ, யாரோ ஒருவரின் பெற்றோராகவோ, யாரோ ஒருவரின் உடன்பிறந்தவராகவோ இருக்கலாம்.
நாம் சரியாக இல்லாத கண்ணாடி வீட்டின் உள்ளே அமர்ந்து கொண்டு அடுத்தவர் வீட்டின் மீது கல்லெறிய முயற்சிக்க வேண்டாம். நாம் எல்லோரும் மனிதர்கள்; ஒருவரை மனிதன் என அழைப்பதற்கு பரிவும், கருணையும்தான் அடிப்படைத் தேவை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்தப் பதிவில், “நான் இப்படி எழுதி இருப்பதால் உங்களின் முட்டாள்தனமான யூகங்களைத்தொடங்கி விடாதீர்கள். ஏனெனில் ஒரு சமூகமாக நாம் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும் என நான் மனப்பூர்வமாக நம்புகிறேன்” என்ற குறிப்பையும் அவர் எழுதியுள்ளார்.
ரேணு தேசாயை பவன் கல்யாண் 2009-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்துக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பவனின் முதல் மனைவி நந்தினி, பவன் கல்யாண் மீது இருதார மணம் தொடர்புடைய வழக்கு தொடர்ந்திருந்தார். ரேணுவை ‘பத்ரி’ படபிடிப்பில் பவன் கல்யாண சந்தித்தார். இந்த முன்னாள் தம்பதிக்கு அகிரா நந்தன், ஆத்யா என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
அன்னாவுடன் பிரிவு: தெலுங்கு சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவரான பவன் கல்யாண். கடந்த 2014-ல் ஜன சேனா கட்சியை நிறுவினார். அதற்கு முன்பு தனது சகோதரர் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் கட்சியிலும் அவர் பணியாற்றி இருந்தார். கடந்த ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம், பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து ஆட்சியில் அமர்ந்தது ஜன சேனா கட்சி. தற்போது ஆந்திராவின் துணை முதல்வராக பவன் கல்யாண் உள்ளார்
இந்நிலையில், தனது மனைவி அன்னா லெஸ்னவாவை அவர் பிரிவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை கூட்டறிக்கை மூலம் பவன் கல்யாணும், அன்னாவும் பகிர்ந்துள்ளனர். இதன் மூலம் அவர்களது 13 ஆண்டுகால திருமண பந்தம் முடிவுக்கு வந்துள்ளது.