“100 முறை அல்ல, 1000 முறை கூட என் கணவரிடம் கேட்பேன்” - சர்ச்சைகளுக்கு ராஷ்மிகா விளக்கம்

“100 முறை அல்ல, 1000 முறை கூட என் கணவரிடம் கேட்பேன்” - சர்ச்சைகளுக்கு ராஷ்மிகா விளக்கம்
Updated on: 
2 min read

ஹைதராபாத்: இணையத்தில் எழுந்த சர்ச்சைக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

சமீபத்தில் இயக்குநர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் ‘காபி வித் கரண்’ என்ற நிகழ்ச்சியில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா இருவரும் கலந்து கொண்டனர். 

அதில், தான் தான் முதலில் திருமண விருப்பத்தை முன்வைத்ததாகவும், விஜய் தேவரகொண்டா 100 முறை ப்ரோபோஸ் செய்யச் சொன்னதாகவும் ராஷ்மிகா நகைச்சுவையாகக் குறிப்பிட்டிருந்தார். இதன் தொடர்ச்சியாக கடந்த பிப்ரவரியில் இவர்களது திருமணம் நடைபெற்றது. எனினும், இந்த நேர்காணலின் சில பகுதிகளை இணையத்தில் பரப்பிய சிலர், விஜய் தேவரகொண்டா மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக ராஷ்மிகா மந்தனா தனது சமூக வலைதள பக்கங்களில் நீண்ட விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “'இணையத்தில் என் மீது மாறா அன்பு வைத்துள்ள நல்ல உள்ளங்களுக்கும், எப்போதும் கசப்பு உணர்வோடு இருப்பவர்களுக்கும் வணக்கம். என் கணவர் விஜய் மற்றும் என்னைப் பற்றி எழும் இந்த முழு விவகாரத்திலும் எனது சிறிய கருத்து இது: 

பொதுவாக இதுபோன்ற விஷயங்களுக்கு ஆன்லைனில் பதில் சொல்வதை நான் தவிர்த்து விடுவேன். ஏனெனில் ஒவ்வொருவருக்கும் கருத்துத் தெரிவிக்கும் உரிமை உண்டு என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். ஆனால் இந்த முறை எல்லை மீறிவிட்டது.

ஆம், அந்த உரையாடல் நடந்தது உண்மைதான். ஆனால் நாங்கள் இருவருமே எந்தவொரு ஆடம்பரமான திருமண முன்மொழிவையும் எதிர்பார்க்கவில்லை. அந்தப் பேச்சுவார்த்தை எதைப் பற்றியது என்றால், வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்கள், மகிழ்ச்சி, மன அழுத்தங்கள் என அனைத்தையும் தாண்டி, நாங்கள் இணைவது சரியா என்பதை இருவரும் போதுமான நேரமெடுத்துப் புரிந்து கொள்வதற்காக மட்டுமே.

நாங்கள் அதைச் செய்தோம். ஒருவரையொருவர் தேர்ந்தெடுத்தோம். எனக்கு என்ன வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருந்ததில் எந்தத் தவறும் இல்லை. 

அதேபோல், அவர் வாழ்க்கையின் நடைமுறைச் சிக்கல்களை யோசித்து முடிவெடுக்க நேரம் கேட்டதிலும் எந்தத் தவறும் இல்லை. அது எங்கள் காதலை எந்த விதத்திலும் மாற்றவில்லை. நான் முழுமையாக உணர்வுகளுக்கு மதிப்பளிப்பவள், அவர் நடைமுறையை யோசிப்பவர். எங்கள் இருவரின் வாழ்வுக்கும் இந்த இரண்டு குணங்களுமே தேவைப்படுகின்றன.

எங்களைப் பொறுத்தவரை, திருமணம் என்பது மண்டியிட்டு மோதிரம் அணிவிக்கும் வெறும் அலங்காரச் சடங்கு கிடையாது. எங்களைப் பொறுத்தவரை திருமணம் என்பது வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் ஒன்றாகக் கட்டமைப்பது. அதை இதுவரை நாங்கள் மிக அழகாகச் செய்திருக்கிறோம் என்று நினைக்கிறேன். நீங்கள் எவருக்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயங்க மாட்டீர்களோ, உங்களுக்காக அதேபோல் செய்யும் ஒருவரைத் தேர்ந்தெடுங்கள். ஆம், என் கணவர் மீது நான் அதிதீவிர காதலோடு இருக்கிறேன். இதில் எப்போது தவறு வந்தது?

திருமணத்திற்குப் பிறகும் கூட, 'நாம் மீண்டும் திருமணம் செய்துகொள்வோம்' என்று சொல்லத் தோன்றும் அளவுக்கு உங்கள் மீது பேரன்பு செலுத்தும் ஒருவரைத் தேர்ந்தெடுங்கள். 100 முறை அல்ல, ஆயிரம் முறை கூட நான் அவரிடம் இதைக் கேட்பேன்.

அடுத்து எனக்கு இலவசமாக அறிவுரை வழங்குபவர்களுக்கு என் நன்றிகள். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு என் வாழ்க்கை மிகவும் கடினமாக இருந்தபோது நீங்கள் யாரும் அங்கு வரவில்லை. என் கணவர் மட்டுமே அப்போதும் இருந்தார், இப்போதும் இருக்கிறார். இப்போது நான் என் வாழ்க்கையிலேயே மிகச் சந்தோஷமாக இருக்கிறேன்.

என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்கள், என்னால் தாங்க முடியும். ஆனால் எங்கள் குடும்பத்தைப் பற்றி எதுவும் தெரியாமல் பேசுவது பெண்ணியம் கிடையாது. அது பெண்ணியம் என்ற போர்வையில் செய்யப்படும் அச்சுறுத்தல். ஒருவரைத் தாழ்த்திப் பேசுவது பெண்ணியம் அல்ல; அவரவர் வாழ்க்கையை அவரே தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தைப் பெறுவதே உண்மையான பெண்ணியம்.” இவ்வாறு ராஷ்மிகா தெரிவித்துள்ளார்.

“100 முறை அல்ல, 1000 முறை கூட என் கணவரிடம் கேட்பேன்” - சர்ச்சைகளுக்கு ராஷ்மிகா விளக்கம்
‘ஓம்’ படத்தின் சாய் பல்லவி கதாபாத்திரம் அறிமுகம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in