

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா கூட்டணியில் உருவாகி இருக்கும் ‘ரணபாலி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.
சுமார் 4 நிமிடங்கள் ஓடும் இந்த ட்ரெய்லர் ரணபாலியின் பிறப்பைச் சொல்லும் ஒரு கூத்துடன் தொடங்குகிறது. அங்குள்ள மலை உச்சியில் உள்ள ஒரு குகைக்கு அருகில் தாய் ஒருத்தி தனிமையில் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். பிறகு அந்தக் குகையில் இருந்து வரும் சாமியார் ஒருவர், அந்தக் குழந்தையால் மிகப் பெரிய காரியம் ஒன்று ஆக வேண்டும் எனக் கூறி, ஆசீர்வதித்து அக்குழந்தைக்கு ‘ரணபாலி’ என்றும் பெயர் சூட்டுகிறார்.
அடுத்த காட்சி, ராயலசீமாவின் கிராமம் ஒன்றைக் காட்டுகிறது. அதற்கு பின்பு தாதுபஞ்ச காலத்தில் ஆங்கிலேயர் ஆட்சியில் மக்கள் பட்ட துயரங்களும், ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக ரணபாலி நடத்திய கிளர்ச்சியும் காட்டப்படுகின்றன.
இடையில் ரணபாலிக்கும் ஜெயம்மாவுக்கும் நடக்கும் திருமணமும், அவர்களுக்குள்ளான பிணைப்பும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்திய சரித்திரத்தின் துயரம் மிகுந்த காலத்தில் காலனி ஆதிக்கத்தின் கொடுமையை கண்முன் காட்டியிருப்பது படத்தின் மீது எதிர்பார்ப்பை உருவாக்குகிறது.
புரட்சியாளனாகவும், காதல் பேசும் கணவனாகவும் கவனம் ஈர்க்கிறார் ரணபாலியாக நடித்திருக்கும் விஜய் தேவரகண்டா. காலனிய காலத்து பெண் தோற்றத்தில் கவர்கிறார் ராஷ்மிகா. பிரிட்டிஷ் அதிகாரியாக அர்னால்ட் வோஸ்லூவின் ஆதிக்கமும் மிரட்டுகின்றன.
தங்கள் திருமணத்துக்கு பிறகு இந்த ஜோடி முதல் முறையாக இணைந்து நடித்திருக்கும் படம் இது என்பது படத்துக்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை ராகுல் சங்கிருத்யன் இயக்கி இருக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு உள்பட 5 மொழிகளில் உருவாகி பான் இந்தியா படமாக அக்டோபர் 16-ம் தேதி திரைக்கு வருகிறது.