

விரைவில் ‘சலார் 2’ படத்தின் தயாரிப்பு பணிகள் தொடக்கம் என்று தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தெரிவித்துள்ளார்.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான படம் ‘சலார்’. இப்படம் எதிர்பார்த்த பிரம்மாண்ட வெற்றியை பெறவில்லை. இப்படத்தின் கதை இன்னும் முடியாத காரணத்தினால், ‘சலார் 2’ படம் எப்போது தொடங்கும் என்பது தெரியாமல் இருக்கிறது. இதனிடையே, ‘சலார் 2’ படம் விரைவில் துவங்கும் என்று தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தெரிவித்துள்ளார்.
ஹாலிவுட் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் விஜய் கிரகந்தூர், ‘சலார் 2’ படம் எப்போது தொடங்கும் என்ற கேள்விக்கு, “பிரசாந்த் நீல் சந்தேகத்திற்கு இடமின்றி இன்று பணிபுரியும் சிறந்த இயக்குநர்களில் ஒருவர். அவரே கடுமையான விமர்சகர் கூட. ஆனால் ‘சலார்’ உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ஓடிடி தளத்திலும் அதிகம் பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக இருக்கிறது.
ஆகையால் ‘சலார் 2’ ஒரு பிரம்மாண்டமான படமாக இருக்கப் போகிறது. பல்வேறு ரசிகர்கள் ’சலார் 2’ எப்போது என்ற கேள்வி எழுந்துக் கொண்டே இருக்கிறது. விரைவில் ‘சலார் 2’ தயாரிப்பில் இறங்கவுள்ளோம் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்” என்று தெரிவித்துள்ளார் விஜய் கிரகந்தூர்.
தற்போது ஜூனியர் என்.டி.ஆர் நடித்து வரும் படத்தினை இயக்கி வருகிறார் பிரசாந்த் நீல். அதன் படப்பிடிப்பு முடிந்தவுடன் ‘சலார் 2’ முதற்கட்டப் பணிகளை தொடங்குவார் என தெரிகிறது.