Pradhama Drishtiya Kuttakkar: விமர்சனம் - காக்கிச் சிறகினிலே விறுவிறு திரை அனுபவம்!

Pradhama Drishtiya Kuttakkar: விமர்சனம் - காக்கிச் சிறகினிலே விறுவிறு திரை அனுபவம்!
Updated on
2 min read

“ஒவ்வொரு சிறைக்குப்  பின்னாலும் ஒவ்வொரு சொல்லப்படாத கதை உள்ளது.” - இதைச்  சொன்னவர்  ‘பாலன்’, ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ திரைப்பட இயக்குநர் சிதம்பரம்.  அது உண்மையும் கூட. சிறைச்சாலைக்கு  இணையாக ஒரு காவல் நிலையத்தில் பதியப்படும் முதல் தகவல் அறிக்கைகளைக் காட்டிலும் பதியப்படாத தீவிரமான விஷயங்கள் மிகவும் அதிகம்.  அப்படி பதியப்படாது நடந்தேறும் சம்பவத்தின் மையம்தான்,  தற்போது வெளியாகி பெரிதும் பாராட்டத்தக்க ‘பிரதம திருஷ்டிய குட்டக்கார்’ (Pradhama Drishtya Kuttakkar) மலையாள திரைப்படம். ‘முதல் பார்வையில் குற்றம்சாட்டப்பட்டவர்’ என இந்தப் படத் தலைப்பின் தலைப்பை அர்த்தப்படுத்தலாம்.

கேரளத்தின் கோட்டயம் நகருக்கு வெளியே,  மர்மமான முறையில் தொடர் கொள்ளைகள் நிகழ்கின்றன.  அதேசமயத்தில், அங்குள்ள ஒரு காவல் நிலையத்தில் கணவனை இழந்ததால் வேலை  கிடைத்து புதிய  பெண் காவலராக சேர்கிறார் அலீனா ஆப்ரஹம். அதே காவல் நிலையத்தில் திருமணமாகாத வயது முதிர்ந்த ஓர் ஆண்,  காதல் கைகூடாத ஓர் இளம் காவல் வாகன ஓட்டுநர் மற்றும் குழந்தைப் பேறுக்காக  சிகிச்சையில் இருக்கும் இன்னொரு பெண் எழுத்தர் ஆகியோரும் உள்ளனர்.

ஓர் இரவு,  ரோந்துப்  பணியின்போது  ஓர் எதிர்பாராத அசம்பாவிதம் நிகழ்ந்தேறுகிறது. அந்நிகழ்வு  அந்த நான்கு காவலர்களை எப்படியெல்லாம் அலைக்கழித்து என்னவெல்லாம் செய்கிறது என்பதே கதை.

நவீன குற்றப் பின்னணி கதைகளில் அலைபேசியும் சிக்னலும், அலைபேசி கோபுரமும், அதன் இருப்பிடமும் குற்றவாளிகளை எளிதில் பிடிக்க உதவுகின்றன.  ஆனால்,  அதையும் தாண்டி இப்படம் சுவாரசியமான சம்பவங்களை அடுக்கி, சட்டத்துக்கும் சூழ்நிலை கைதிகளுக்கும் இடையே ஒரு தொடர் ஓட்டப் பந்தயம் போல விறுவிறுப்பாக நிகழ்த்தியிருக்கிறது.

ஹிட்ச்காக் திரைப்படமான ‘சைக்கோ’வில்  வருவது போலவே  முதல் பகுதியில் வரும் தொடர் கொள்ளைகள் வெறும் ஒரு கவனக் கலைப்பு மட்டுமே. ஆனால், கதையின் மையம் வேறொரு இடத்தில் வேறொரு விதமாக மாறி வேகமெடுக்கும் பாணி அற்புதம்.

எழுத்தாளர் சுஜாதா நாவலின் தலைப்பு போல் ‘விருப்பமில்லாத திருப்பங்கள்’ பலதும் நிகழ்ந்து வைக்கின்றன. படத்தின் முற்பகுதியில் போடப்படும் ஒவ்வொரு முடிச்சுக்கு பிற்பகுதியில் அதற்கான காரணத்தை இணைந்திருப்பது எழுத்தாளர்கள் பி.எஸ்.சுப்ரமணியன் மற்றும் விஜேஷ் தொட்டுங்கல்லின் எழுத்தாளுமையின் புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறது.

ஒரு குற்றவியல் நாவலுக்கு எவ்விதத்திலும் சளைக்காமல் கதாபாத்திரங்களும் பரபரப்பான சம்பவங்களும் ஒன்றோடு ஒன்று பிணைத்து அதிவேகமாக படத்தை நகர்த்தியிருப்பது இயக்குநர் ஷஹத் நிலம்பூரின் தனிப்பெரும் திறமை. இத்தனைக்கும் இவரின் இரண்டு முந்தய படங்களும் மிகவும் இலகுவான நகைச்சுவை படங்கள் என்பதொரு ஆச்சரியம்.

இரவுக்  காட்சிகளையும் கதாபாத்திரங்களின் துல்லியமான உணர்வுகளையும் நேர்த்தியாக படம்பிடித்து இருப்பது ஒளிப்பதிவாளர் ரோபி வர்கீஸ் ராஜின் பெரும் பங்களிப்பை காட்டுகிறது.

முஜீப் மஜீத்தின்  பின்னணி இசை சில இடங்களில் பொருத்தாமல் நவீனமாக ஒலித்துக் கொண்டிருப்பது தவிர, பெரும்பாலான இடங்களில் நன்றாகவே இருக்கிறது.

கதை பெரும்பாலும் நிகழும் காவல் நிலையம் நிர்மாணிக்கப்பட்ட அரங்கு  என அறிய வரும்போது ஏற்படும் அதிர்ச்சியே கலை இயக்குநர் மகேஷ் மோகனனின் பெரு வெற்றி.

தோளில் கைக்குழந்தையுடன் தனக்கு கணக்கர் பணிக்குப் பதிலாக சீருடைப் பணி  வேண்டும் என்று கண்ணீர் தேக்கியபடி சொல்லும் முதல் சுட்டிலேயே அலீனாவாக நடித்திருக்கும் பார்வதி திருவோத்து தன் ஆட்டத்தை ஆரம்பித்து விடுகிறார்.

கணவரை இழந்த சோகம்,  கையறு நிலை,  தன்னம்பிக்கை, குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பு என பல்வேறு பாவனைகளின் அரசியாக அமர்க்களப்படுத்தி இருக்கிறார். தன்  இருபது வருட நடிப்புப் பயணத்தில் ஏற்ற முதல் போலீஸ் கதாபாத்திரத்தை முக்கிய மைல்கல் நடிப்பாக மாற்றியிருப்பது வெகு சிறப்பு.

இந்தியாவின் எந்த முன்னணி நடிகர்களோடும் இப்படத்தில் பார்வதியின் நடிப்பை அசாதாரணமாக ஒப்பிட்டு விடலாம்.  இப்படத்தின் இறுதிக் காட்சியில்  இவர் உணர்வெழுச்சியுடன் பேசும் வசனம் திரிஷ்யம் ஒன்றாம் பாகத்தைக்  கூட லேசாக தாண்டி விடுவது போல பார்வையாளர்களுக்கு தோன்றுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

 திவ்யா சேச்சியாக வரும் உன்னிமாயா பிரசாத்தும் பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இணை கதாபாத்திரங்களான சித்தார்த் பரதன், மேத்தியூ தாமஸ், அஜீஸும் குறை வைக்கவில்லை. கொஞ்ச நேரமே வந்தாலும் வினய் ஃபோர்ட்டின் இலகுவான நடிப்பு படத்தின் மிகப் பெரிய ஆசுவாசம்.

கதையின் இன்னொரு மையமான கதாபாத்திரத்தில் க்ரைம் பிரெஞ்ச் அதிகாரியாக வரும் விஜயராகவன் இறுக்கத்தையும் கம்பீரத்தையும் காட்டினாலும் துப்பறியும் பாத்திரப் படைப்பில் லேசாக சறுக்கியிருக்கிறார்.

ஒரு காட்சியில்,  காவல் நிலையத்தில் பழக்கப்படுத்தப்பட்ட காவல் நாய்களைக் கொண்டு விசாரணை செய்யும் 3 நிமிடக் காட்சி நம்மை இருக்கையின் நுனியில் பதற்றத்துடன் அமர வைக்கிறது.

கேள்விகள், விடைகள், முடிச்சுகள் என நிகழும் ஒவ்வொரு சம்பவத்தின் நீட்சியும் பார்வையாளர்களான நம்மை வெகுவாக பதற்றமடையவும், அதேசமயத்தில் கதையோட்டத்தில் பங்கேற்பாளர்களாகவும் ஆக்கி  வைக்கிறது

இந்தியாவின் வேறு எந்த மொழியிலும் இல்லாத வகையில் கடந்த 10 ஆண்டுகளில் மலையாள பட உலகத்தில் மட்டுமே வந்த போலீஸ் படங்கள் வெகு அதிகம். ஆனாலும், ஒவ்வொரு கதையையும் அவ்வளவு உண்மையாகவும் உளவியல் சிக்கல்களின் வெகு அருகாமையிலும் காவல் துறை படங்கள் தொடுவது வெகு சிறப்பு. 

பல ஆண்டுகளாக காவலர்களை குற்றவாளிகள் போலவும், கோமாளிகள் போலவும் காட்டிக் கொண்டிருந்த காலம் மாறிவருவது  மிகப் பெரிய ஆறுதல்.

“நேர்த்தியாக செய்யப்பட்ட குற்றம் என்று எதுவுமில்லை. ஆனால், நேர்த்தியாக செய்யப்படும் விசாரணை என்பது உண்மை” - இப்படத்தில் வரும் இந்த ஒரு வசனத்தின் ஆதாரத்தை படம் வெகுவாக சுமந்து செல்கிறது.

கேரள சினிமாவின் காக்கிச் சீருடை படங்களின் வரிசையில் ‘பிரதம திருஷ்டிய குட்டக்கார்’ படத்துக்கு என்றென்றும் ஒரு தனி இடம் இருந்தே தீரும் என்பதில் சந்தேகமில்லை.

Pradhama Drishtiya Kuttakkar: விமர்சனம் - காக்கிச் சிறகினிலே விறுவிறு திரை அனுபவம்!
Pallaburusu: புறாவுக்காக ஒரு பெரும் போர் | ஓடிடி திரை அலசல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in