

பிரபாஸ் நடித்து வரும் ‘ஸ்பிரிட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.
ஜனவரி 9-ம் தேதி பிரபாஸ் நடிப்பில் வெளியாகவுள்ள படம் ’தி ராஜா சாப்’. இப்படத்தைத் தொடர்ந்து ‘ஃபெளசி’ மற்றும் ‘ஸ்பிரிட்’ ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார் பிரபாஸ்.
இதில் ‘ஸ்பிரிட்’ படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. புத்தாண்டு கொண்டாட்டமாக ‘ஸ்பிரிட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. இதற்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.
சந்தீப் ரெட்டி வாங்காவின் முந்தைய படங்களைப் போலவே, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பற்றியும் இணையத்தில் விவாதிக்க தொடங்கினார்கள். பிரபாஸின் லுக், கையில் இருக்கும் மது பாட்டில், வாயில் சிகரெட் உள்ளிட்டவற்றை வைத்து கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஆனாலும் பிரபாஸின் முந்தைய படங்களின் ஃபர்ஸ்ட் லுக்கை விட இது சிறப்பாக இருப்பதாக பலரும் தெரிவித்துள்ளனர்.
சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் பிரபாஸ், விவேக் ஓபராய், திருப்தி டிம்ரி உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ‘ஸ்பிரிட்’. இதனை டி-சீரிஸ் நிறுவனம் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன. பிப்ரவரி மாதத்தில் ஒரு நீண்ட நாட்கள் படப்பிடிப்புக்காக படக்குழு தயாராகி வருகிறது.