

உபேந்திரா நடித்த ‘கப்ஸா’ திரைப்படத்தை இயக்கிய ஆர்.சந்துரு, மீண்டும் ஒரு பிரம்மாண்ட பான் இந்தியா திரைப்படத்தை இயக்குகிறார். இதில் சிவராஜ்குமார் ஹீரோவாக நடிக்கிறார். தெலுங்கு நடிகர் சுனில் உள்பட பலர் நடிக்கின்றனர். அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கும் இப்படத்துக்கு ஏ.ஜே ஷெட்டி ஒளிப்பதிவு செய்கிறார். ஆர்சி ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் மும்பையில் வெளியிடப்பட்டது.
இவ்விழாவில் சிவராஜ்குமார், கீதா சிவராஜ்குமார், தயாரிப்பாளர் ஆனந்த் பண்டிட், இயக்குநர் சந்துரு உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். இப்படத்துக்கு ‘ஒரிஜினல் மான்ஸ்டர்’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.
இயக்குநர் சந்துரு கூறும்போது, “நான் ‘கப்ஸா’ படத்தை உருவாக்கியபோது, இந்தியா முழுவதும் சுமார் 4 ஆயிரம் திரையரங்குகளில் ஒரு படத்தை வெளியிட முடியும் என்பதை உணர்ந்தேன். ஆனால் அதற்கு ஒரு வழிமுறை இருக்கிறது, அதை நட்சத்திரங்களால் மட்டுமே சாத்தியப்படுத்த முடியும்.
அந்த சிந்தனைதான் இந்தத் திரைப்படத்தின் நடிகர்கள் தேர்வை தீர்மானித்துள்ளது. ஒரு கன்னடப் படத்தை மற்ற மொழிகளில் வெறும் டப்பிங் செய்வதோடு நிறுத்தாமல், வெவ்வேறு மொழிகளைச் சேர்ந்த நடிகர்களை வைத்து அந்தந்த மாநில ரசிகர்களிடமும் படத்தைக் கொண்டு சேர்க்க விரும்புகிறோம். சிவராஜ்குமாரை மனதில் வைத்துதான் இந்தக் கதையை எழுதினேன். அவர் உலகளாவிய ஹீரோ. தமிழ், மலையாளம் உள்பட மற்ற மொழி நடிகர்களும் இதில் நடிக்க இருக்கிறார்கள்” என்றார்.