‘தி பாரடைஸ்’ எதிர்வினைகள் உணர்த்தியது என்ன? - மனம் திறந்த நானி

‘தி பாரடைஸ்’ எதிர்வினைகள் உணர்த்தியது என்ன? - மனம் திறந்த நானி
Updated on: 
1 min read

‘‘எனது 18 வருட திரைப் பயணத்தில் 33 படங்களில் இந்த மாதிரியான அனுபவம் கிடைப்பது இதுவே முதல்முறை’’ என ‘தி பாரடைஸ்’ பட எதிர்வினை அனுபவம் குறித்து நானி தெரிவித்துள்ளார்.

‘தி பாரடைஸ்’ பட வெளியீட்டுக்கு பின்பு இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலாவுடன் நடந்திய ஓர் உரையாடல் நிகழ்ச்சியில் நானி இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் நானி கூறுகையில், ‘‘என்னுடைய 18 ஆண்டு கால திரைப் பயணத்தில், எனது 33 படங்களில் முதல் முறையாக இப்படி ஓர் அனுபவத்தை நான் பெறுகிறேன். ஆனாலும் படம் பிடிக்கவில்லை என ஒருவர் கூறும்போது, அந்த பதிலுக்கு பின்னால், தீவிரமான உணர்வும், வெளிப்படையான நேர்மையும் இருக்கிறது.

‘இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை’ என கூறும்போது அந்தத் தீவிரம் ஓர் உண்மையை உணர்த்துகிறது. இதை நான் ஒரு சாதகமான அம்சமாகவே பார்க்கிறேன்.

நானும் ஸ்ரீகாந்த் ஒடேலாவும் இணைந்து பணியாற்றுவதில் மக்கள் அவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அந்த எதிர்பார்ப்புடனும், உணர்வுடனும் மக்கள் திரையரங்குக்கு வருகிறார்கள். இவ்வளவு தீவிரமாக எதிர்வினை ஆற்றுகிறார்கள். இதற்கு ஒரே அர்த்தம், அந்த அளவுக்கு நாங்கள் உண்மையான ஒன்றை உருவாக்கி இருக்கிறோம். மேலோட்டமாக இந்த எதிர்வினைகள் எப்படிபட்டதாக தெரிந்தாலும், அவர்களின் நம்பிக்கை நிஜமானது.

அடுத்த எங்களின் படம், அது நாங்கள் தனித்தனியாக பணியாற்றினாலும் சரி, இருவரும் இணைந்து பணியாற்றுவதாக இருந்தாலும் சரி, அந்தப் படைப்பு ‘பாரடைஸ்’ படத்தால் அதிருப்தி அடைந்தவர்கள், படத்தைப் பிடிக்கவில்லை என்று சொன்னவர் எல்லோரும் திரையரங்கை விட்டு வரும்போது கொண்டாடும் வகையிலான படமாக அமைய வேண்டும். அதுதான் நாங்கள் அவர்களுக்கு திருப்பிச் செய்ய வேண்டியது.

இந்தப் படத்தை ரசித்தவர்கள் அந்தப் படத்தையும் ரசிக்க வேண்டும். இந்தப் படத்தை பிடிக்கவில்லை என்று சொன்னவர்களுக்கு அந்தப் படத்தில் குறைசொல்ல காரணம் இருக்கக் கூடாது’’ என்று நானி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான படம் ‘தி பாரடைஸ்’. ‘தசரா’ வெற்றிக்குப் பிறகு  மீண்டும் இந்த கூட்டணி இணைந்திருக்கும் இந்தப் படத்தில், மோகன் பாபு, ராகவ் ஜுயல், கயாது லோஹர், சம்பூர்ணேஷ் பாபு, சோனாலி குல்கர்னி உள்ளிட்டோருடன் கவுரவத் தோற்றத்தில் கீர்த்தி சுரேஷும் நடித்தள்ளார்.

இந்தப் படம் செப்டம்பர் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் குறித்து எதிர்மறையான விமர்சனங்கள் வந்தபோதிலும் ‘தி பாரடைஸ்’ படம் நல்ல வசூலையே பெற்று வருகிறது.  ஐந்தாவது நாளில் இந்தப் படம் உலக அளவில் ரூ.144 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

‘தி பாரடைஸ்’ எதிர்வினைகள் உணர்த்தியது என்ன? - மனம் திறந்த நானி
“எங்களுக்குள் பல ஒற்றுமைகள்...” - ஃபஹத் பாசில் குறித்து சூர்யா பகிர்வு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in