

அனுமதியின்றி தனது பெயர், புகைப்படங்கள், காணொளிகள், குரல் ஆகியவற்றை வர்த்தக நோக்கங்களுக்குப் பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் அல்லு அர்ஜுன் மனு தாக்கல் செய்துள்ளார்.
திரை பிரபலங்களான மோகன்லால், பவன் கல்யாண், கஜோல், ஆர். மாதவன், ஜூனியர் என்.டி.ஆர், சல்மான் கான், நாகார்ஜுனா என பலர், இதுபோல வழக்குகளைத் தாக்கல் செய்து இடைக்கால தடை பெற்றுள்ள நிலையில், இப்போது நடிகர் அல்லு அர்ஜுனும் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி துஷார் ராவ் கெடேலா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அல்லு அர்ஜுன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சுவாதி சுகுமார், அல்லு அர்ஜுனின் உருவம் அவரது அனுமதியின்றிப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் பல நிகழ்வுகளை நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.
அதில் அவரது உருவம் பொறிக்கப்பட்ட வணிகப் பொருட்கள், ஆட்சேபனைக்குரிய மற்றும் ஆபாசமான உள்ளடக்கங்கள், அத்துடன் அவரது அடையாளத்தைப் பயன்படுத்தும் செயற்கை நுண்ணறிவு சார்ந்தவை அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.