

தனது அடையாளத்தை மாற்றி, முன்னணி ஹீரோ படங்களில் துணை நடிகராக நடித்துள்ள கொலைக்குற்றவாளியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
குஜராத்தைச் சேர்ந்தவர் ஹேமந்த் மோடி (53). கடந்த 2005-ம் ஆண்டு அகமதாபாத்தின் நரோடா பகுதியில் நடைபெற்ற ஒரு கொலை வழக்கில் இவருக்கு நீதிமன்றம், ஆயுள் தண்டனை விதித்தது.
இதைத் தொடர்ந்து மெஹ்சானா மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை மாதம், 30 நாட்கள் பரோலில் வெளியே வந்த அவர், அதன்பின் போலீஸில் சரணடையாமல் தலைமறைவானார். அவரைத் தேடி வந்தனர்.
இந்நிலையில் மும்பைக்குச் சென்ற ஹேமந்த் மோடி, அங்கு தனது அடையாளத்தை முழுமையாக மாற்றினார். ‘ட்விங்கிள் தவே’, ‘ஸ்பந்தன் மோடி’ ஆகிய புனைபெயர்களுடன் பாலிவுட்டில் துணை நடிகராக நுழைந்தார்.
கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல திரைப் படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களில் துணை நடிகராக நடித்து வந்துள்ளார். ஆமிர் கான், அமிதாப்பச்சன் நடிப்பில் வெளியான ‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’, ரன்வீர் சிங்கின் ‘ஜெயேஷ்பாய் ஜோர்தார்’, மோகன்லால் நடித்த ‘L2: எம்புரான்’, சன்னி தியோலின் ‘லாகூர் 1947’ உள்பட பல பெரிய பட்ஜெட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சில குஜராத்தி தொடர்களிலும் நடித்திருக்கிறார். இந்நிலையில், சமீபத்தில் அவர் மீண்டும் அகமதாபாத்துக்கு வந்தபோது, கீகண்டா மெட்ரோ நிலையம் அருகே குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
ஹேமந்த் மோடி தற்போது மீதமுள்ள சிறைத் தண்டனையை அனுபவிப்பதற்காக மீண்டும் மெஹ்சானா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தன் அடையாளத்தை மறைத்து கொலைக் குற்றவாளி ஒருவர் திரைப்படங்களில் நடித்து வந்தது, பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.