

நடிகை மமிதா பைஜு உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் ஆஸ்திரேலியாவில் அவர் கலந்துகொள்வதாக இருந்த நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
‘பிரேமலு’ படம் பிரபலமான மலையாள நடிகை மமிதா பைஜு, தமிழில் ரிபெல், டியூடு, ஜனநாயகன், விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்துள்ள ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது. தெலுங்கு படங்களிலும் நடித்து வரும் அவர் ஆஸ்திரேலியாவின் மலையாளிகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஓணம் பண்டிகை விழாவில் சிறப்பு விருந்தினராக செப்.5-ம் தேதி கலந்துகொள்ள இருந்தார்.
இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இதனால் பயணத்தைத் தவிர்க்குமாறும், முழுமையான ஓய்வு எடுக்குமாறும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அவருடைய ஆஸ்திரேலிய நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, வீடியோ ஒன்றை மமிதா பைஜு வெளியிட்டுள்ளார். அதில், ‘‘ஆஸ்திரேலியாவின் மலையாளிகள் சங்கம் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாததில் மிகுந்த வருத்தம். இதற்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.