

சாவித்திரி ஸ்ரீதரன்
திருவனந்தபுரம்: தேசிய விருது பெற்ற பிரபல மலையாள நடிகையும் பழம்பெரும் நாடகக் கலைஞருமான சாவித்திரி ஸ்ரீதரன், வயது முதிர்வு தொடர்பான உடல்நலக் குறைவு காரணமாகக் காலமானார். அவருக்கு வயது 78. அவரது மறைவுக்கு கேரள அரசியல் தலைவர்களும் திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தனது 16-வது வயதில் நாடகத்துறையில் பயணத்தைத் தொடங்கிய சாவித்திரி ஸ்ரீதரன், 40 ஆண்டுகளுக்கும் மேலாக நாடகமேடைகளில் நடித்து தனி முத்திரை பதித்தவர். பிரபல நாடக ஆசிரியர் கே.டி.முகமதுவின் ‘தீபஸ்தம்பம் மகாச்சர்யம்’ உள்பட பல புகழ்பெற்ற நாடகங்களில் நடித்து பாராட்டுக்களைப் பெற்றார். நாடகத்துறைக்கு அவர் ஆற்றிய சிறந்த பங்களிப்புக்காக ‘கேரள சங்கீத நாடக அகாடமி விருது’ வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
1991-ஆம் ஆண்டு எம்.டி.வாசுதேவன் நாயர் இயக்கிய 'கடவு' திரைப்படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் அறிமுகமான இவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2018-ல் வெளியான ‘சுடானி ஃப்ரம் நைஜீரியா’ படம் மூலம் மீண்டும் பிரபலம் ஆனார்.
அந்த படத்தில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக, 2019-ல் சிறந்த குணசித்திர நடிகைக்கான கேரள மாநில திரைப்பட விருது மற்றும் தேசிய திரைப்பட விருதின் சிறப்புப் பிரிவு விருது ஆகியவற்றை வென்றார்.
அவரது மறைவுக்கு கேரள முதல்வர் வி.டி.சதீசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.