

நடிகர் ஜோஜு ஜார்ஜ்
பிரபல மலையாள நடிகரான ஜோஜு ஜார்ஜ், ‘ஜகமே தந்திரம்’, ‘பபூன்’, கமலின் ‘தக் லைஃப்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்து சமீபத்தில் வெளியான ‘வரவு’ படம் சரியான வரவேற்பைப் பெறவில்லை. இதை ஷாஜி கைலாஷ் இயக்கியிருந்தார்.
இந்நிலையில் ரசிகர்களுடன் சமூக வலைதளத்தில் உரையாடிய ஜோஜு ஜார்ஜ், “தனக்கு எதிராக முன்னணி நடிகர் ஒருவரும் அவர் மனைவியும் எதிர்மறையான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சாட்டினார். அவர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல் பேசிய அவர், “சிலர் பணம் கொடுத்து தங்களைப் பற்றிய நல்ல செய்திகளையும் மற்றவர்களைப் பற்றி எதிர்மறையான செய்திகளையும் பரப்புகிறார்கள்.
எனக்கு எதிராகவும் இப்படிப்பட்ட முயற்சிகள் நடக்கின்றன. ஒரு முன்னணி நடிகரும் அவரது மனைவியும் இதன் பின்னணியில் உள்ளனர். மலையாள சினிமாவில் பணம் கொடுத்துப் பல பிரபலங்கள், தங்களைப் பற்றி பிரச்சாரம் செய்து வருகின்றனர். சமூக ஊடகங்கள் மற்றும் சில ஊடக தளங்கள் மூலம் பொதுமக்களின் கருத்தை மாற்றும் முயற்சிகளும் நடைபெறுகின்றன.
உண்மையை விட உருவாக்கப்பட்ட பொய் பிம்பங்களே தற்போது அதிகம் பேசப்படுகின்றன. நான் நடித்துள்ள ‘வரவு’ திரைப்படம் வெளியானது முதல், அதற்கு எதிராகவும் திட்டமிடப்பட்ட எதிர்மறைப் பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன” என்றார். நடிகர் ஜோஜூ ஜார்ஜின் இந்தக் கருத்து மலையாள சினிமாவில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.