“சபரிமலையில் படப்பிடிப்பு நடத்த அனுமதி இல்லை” – கேரள அமைச்சர் திட்டவட்டம்

“சபரிமலையில் படப்பிடிப்பு நடத்த அனுமதி இல்லை” – கேரள அமைச்சர் திட்டவட்டம்
Updated on
1 min read

இனி சபரிமலையில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடையாது என்று கேரளம் தேவசம் போர்டு அமைச்சர் கே.முரளிதரன் தெரிவித்துள்ளார். மோகன்லாலின் ‘அதிமனோகரம்’ படத்தின் படப்பிடிப்பை சபரிமலையில் நடத்த அனுமதி வழங்கியது சர்ச்சையான நிலையில் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு, திருவிதாங்கூர் தேவசம் போர்டு பல நிபந்தனைகளுடன் மோகன்லால் படத்தின் படப்பிடிப்பினை சபரிமலையில் நடத்த அனுமதி வழங்கி இருந்தது. அதே நேரத்தில் வனத்துறை படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதி மறுத்து விட்டது.

இந்த விவகாரம் குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றிடம் பேசிய மூத்த காங்கிரஸ் தலைவரும், தேவசம் போர்டு அமைச்சருமான  கே.முரளிதரன், “சபரிமலையில் திரைப்படங்களுக்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்க முடியாது. சபரிமலை கோயில் அல்லது ஐயப்பன் தொடர்பான படங்கள் அல்லது ஆன்மிக படங்களுக்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்படலாம்.

சாதாரண படங்களுக்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்க முடியாது. கோயிலைப் படப்பிடிப்புக்கு வழங்க முடியாது. இதுவே அரசின் கொள்கை” என்றார். மேலும் இந்த விவகாரத்தை தீவிரமாக கவனித்து வருவதாகவும் தெரிவித்தார்.

சில தினங்களுக்கு முன்பு, தேவசம் போர்டு, சபரிமலை அதன் சுற்றுவட்டார பகுதிகளில்  ‘அதிமனோகரம்’ படப்பிடிப்பு நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி இருந்தது.

சபரிமலை கோயில், அதன் மரபு மற்றும் நம்பிக்கைகளுக்கு எதிரான காட்சிகள், வசனங்கள் எதுவும் படத்தில் இருக்கக் கூடாது. படப்பிடிப்புக்கு வனத்துறையிடம் தனியாக அனுமதி பெற வேண்டியது அவசியம் போன்ற நிபந்தனைகள் முதன்மையானது. ஆனால், வனத்துறை அனுமதி மறுத்துள்ளதால் படப்பிடிப்பு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே தேவசம் போர்டு முதலில் எப்படி அனுமதி வழங்கியது, ஒரு வழிபாட்டு தளத்தில் வணிக திரைப்படங்களுக்கு படப்பிடிப்பு நடத்த எப்படி அனுமதிக்க முடியும் என்ற கேள்வியை இந்த சம்பவம் எழுப்பியுள்ளது. சபரிமலைக் கோயில் திருவிதாங்கூர் தேவசம் போர்டால் நிர்வகிக்கப்படுகிறது.மா

முன்னதாக, மோகன்லால் காவல் துறை அதிகாரி உடையில், கழுத்தில் கருப்பு துண்டுடன், சபரிமலைக்கு மாலையணிந்து செல்லும் பக்தர்கள் கூட்டத்தினுள் நின்று கொண்டிருப்பது போல், வெளியான ‘அதிமனோகரம்’ படத்தின் முதல் தோற்றம் வெளியானது.

‘துடரும்’ படத்துக்கு பின்பு, மோகன்லாலும் தருண் மூர்த்தியும் இணைந்து பணியாற்றும் ‘அதிமனோகரம்’ படத்தில், மோகன்லால் சாதாரண உதவி ஆய்வாளராக நடித்துள்ளார். நாயகியாக மீரா ஜாஸ்மின் நடிக்கிறார்.

படத்துக்கான திரைக்கதையை ரதீஸ் ரவி எழுத, மோகன்லாலின் பல படங்களில் பணியாற்றியிருக்கும் ஷாஜி குமார் ஒளிப்பதிவு செய்கிறார். 

“சபரிமலையில் படப்பிடிப்பு நடத்த அனுமதி இல்லை” – கேரள அமைச்சர் திட்டவட்டம்
“தூக்கத்திலேயே உயிர் பிரிந்தது” - நடிகை அனன்யா ராஜ் மரணம் குறித்து குடும்பத்தினர் உருக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in