

துருவா சர்ஜா ஹீரோவாக நடித்துள்ள பான் இந்தியா திரைப்படம், ‘கேடி: தி டெவில்’. இதில் சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி, வி.ரவிச்சந்திரன், ரமேஷ் அரவிந்த், ரீஷ்மா நானையா, நோரா ஃபதேஹி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரேம் இயக்கியுள்ள இப்படத்தை ‘ஜனநாயகன்’ படத்தைத் தயாரித்துள்ள கே.வி.என் புரொடக் ஷன்ஸ் தயாரித்துள்ளது.
இப்படத்தில் இருந்து வெளியான குத்துப் பாடலின் இந்திப் பதிப்பு சில மாதங்களுக்கு முன் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது. பல்வேறு இந்தி பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் யூடியூப்பில் இருந்து அப்பாடல் நீக்கப்பட்டது.
இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் ஏப்.22-ம் தேதி வெளியானது. ஆனால் கேவிஎன் நிறுவனம் யூடியூப்பில் இருந்து அதை திடீரென நேற்று முன் தினம் நீக்கி உள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “தணிக்கை நடைமுறையின் போது, சான்றிதழ் பெறாத சில காட்சிகள் கவனக்குறைவாக அதில் இடம் பெற்றுவிட்டன. அதனால் அந்த முன்னோட்ட காட்சியை நீக்கியுள்ளோம்.
தணிக்கை வழிகாட்டுதல்களுக்கு இணங்க, திருத்தப்பட்ட புதிய பதிப்பை விரைவில் பதிவேற்றுவோம். இந்த கவனக்குறைவுக்கு வருந்துகிறோம். தணிக்கை விதிமுறைகள் அனைத்தையும் முழுமையாகப் பின்பற்றுவதில் உறுதியாக இருக்கிறோம்” என்று கூறியுள்ளது.