

உன்னி முகுந்தன் நடித்து வெற்றி பெற்ற ‘மார்கோ’ படத்தைத் தயாரித்த ஷெரிப் முகம்மது, தனது கியூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் அடுத்துத் தயாரிக்கும் படம் ‘கட்டாளன்’. இதைப் பால் ஜார்ஜ் இயக்கியுள்ளார். மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள இதில் துஷாரா விஜயன் நாயகியாக நடித்துள்ளார்.
சுனில், கபீர் துஹான் சிங் , ராப்பர் பேபி ஜீன், ராஜ் திரண்டாசு, பாலிவுட் நடிகர் பார்தத் திவாரி ஆகியோர் நடிக்கின்றனர். அஜனீஷ் லோக்நாத் இசை அமைக்கிறார். ஆக் ஷன், த்ரில்லர் படமான இது மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழிகளில் வெளியாக இருக்கிறது. 'ஓங் -பாங்' என்ற தாய்லாந்து படம் மூலம் பிரபலமான பாங் என்ற யானையும், இதில் ஒரு பகுதியாக இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் டீஸர் தற்போது வெளியிடப் பட்டுள்ளது. பிரம்மாண்ட ஆக் ஷனுடன் தந்தங்களுக்காக யானைகளை வேட்டையாடும் காட்சிகளுடன் இடம்பெற்றுள்ள இந்த டீஸர் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தின் கதை, யானைத் தந்த கடத்தல் பின்னணியில் உருவாகி இருப்பதாகக் கூறப்படுகிறது.