

‘ஆர்டிஎக்ஸ்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு துல்கர் சல்மான் மலையாள சினிமாவுக்குத் திரும்பியுள்ள திரைப்படம் தான் ‘ஐம் கேம்’. தொடர்ந்து தெலுங்கு, தமிழ் என பிஸியாக இருந்தவர், ஒரு ஃபேன்டஸி ஆக்ஷன் கதைக்களத்துடன் மீண்டும் மலையாளத்தில் களமிறங்கியுள்ளார்.
கோடீஸ்வரக் குடும்பத்தில் பிறந்து தந்தையின் விருப்பப்படி நிறுவனத்தை நடத்தி வந்தாலும், சூதாட்டத்துக்கு அடிமையாகி, கடனில் மூழ்கிக் கிடக்கும் டேன் (துல்கர் சல்மான்). மறுபுறம், கிரிக்கெட் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவரான விக்கி (ஆண்டனி வர்கீஸ்). எதிர்பாராத விதமாக நடக்கும் ஒரு விபத்துக்கு பிறகு ஏற்படும் ஒரு விசித்திரமான நிகழ்வால் இந்த இருவரின் வாழ்க்கையும் ஒன்றுக்கொன்று தற்செயலாகப் பின்னப்படுகிறது.
இந்தச் சூழல் அவர்களின் வாழ்க்கையில் பல குழப்பங்களையும் ஏற்படுத்துகிறது. அதிலிருந்து இருவரும் எப்படி மீண்டனர் என்பதே படத்தின் மீதிக் கதை.
ஹாலிவுட்டில் பலமுறை பரிசோதிக்கப்பட்ட ஒரு கதைக்களத்தை மலையாள சினிமாவுக்கு ஏற்ற வகையில் ஃபேன்டஸி கலந்து கையாண்ட விதம் பாராட்டுக்குரியது.
நாயகனுக்கு விபத்து ஏற்படும் வரை சலிப்புடன் நகரும் படம், அதன் பிறகு ஒரு பாடி ஹாரர் / ஃபேண்டசி ஜானருக்குள் நுழைகிறது. தனது கை, தன் கட்டுப்பாட்டை மீறிச் செயல்படும்போது நாயகன் சந்திக்கும் அவஸ்தைகள் தொடர்பான காட்சிகள் சுவாரஸ்யம். அதன் பிறகு இடைவேளை வரையுமே கலகலப்புக்கு பஞ்சமில்லை, காட்சிகளும் ஒன்றன்பின் ஒன்றாக பார்வையாளர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் எழுதப்பட்டுள்ளன.
எனினும் அதுவரை திரைக்கதையில் கவனம் செலுத்திய இயக்குநர், இடைவேளைக்கு பிறகு கோட்டை விட்டிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். இதுபோன்ற ஒரு ஹாலிவுட் பாணி மசாலா படங்களில் இருக்க வேண்டிய குறைந்தபட்ச புத்திசாலித்தனமான காட்சிகள் கூட இதில் மிஸ்ஸிங்.
ஃபேன்டசியாக தொடங்கிய படம் வழக்கமான பழிவாங்கும் கதையாக தடம் புரள்வது ஏமாற்றம். கிரிக்கெட் லீக் சூதாட்டம் குறித்த நீண்ட பிளாஷ்பேக் பகுதி கடும் சலிப்பை ஏற்படுத்துகிறது. சில காட்சிகளில் சொல்லி முடித்திருக்க வேண்டிய விஷயத்தை, ஜவ்வாக இழுத்து வைத்துள்ளனர்.
துல்கர் சல்மானுக்கு நடிகராக இது மேலும் ஒரு வெற்றி என்றே சொல்லலாம். வழக்கம்போல தனது அட்டகாச திரை ஆளுமையால் ஒற்றை ஆளாக படத்தை மொத்தமாக சுமந்திருக்கிறார். குறிப்பாக, தனது கட்டுப்பாட்டை மீறி தன் கை செயல்படும் காட்சிகளில் அவரது நடிப்பு அருமை. பல மொழிகளிலிருந்து நடிகர்களைக் கொண்டு வந்தபோதிலும், எந்தவொரு கதாபாத்திரமும் வலுவாக எழுதப்படவில்லை.
எனினும் ஆண்டனி வர்க்கீஸ், வில்லனாக வரும் மிஷ்கின், கயாடு லோஹர், சம்யுக்தா, கதிர் குறை சொல்ல முடியாத நடிப்பை வழங்கியுள்ளனர். ஜிம்ஷி காலித்தின் கலர்ஃபுல் ஒளிப்பதிவும், அஜயன் சாலிசேரியின் தயாரிப்பு வடிவமைப்பும் வேறொரு உலகத்துக்குள் இழுத்துச் செல்கின்றன. ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை கதைக்கு தேவையானதை கொடுத்திருக்கிறது.
சூதாட்டத்தின் விளைவுகள் குறித்து ஆழமாகப் பேசியிருக்க வேண்டிய இடங்கள் வெறும் ஓரிரு வசனங்களோடு கடந்து செல்லப்படுகின்றன.
துல்கருக்கும், கயாடுவுக்கும் இடையேயான காதல் பெயரளவில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. அது தொடர்பான காட்சிகளில் எந்தவித ஆழமோ, உணர்வோ இல்லை. ஆரம்பத்தில் நோயாளி என நிராகரிக்கும் நாயகி, பின்னர் பரிதாபப்பட்டு ஏற்றுக்கொள்வது எல்லாம் படு க்ளிஷே.
173 நிமிடங்கள் ஓடும் படத்தின் நீளம் பெரும் குறை. பார்வையாளர்கள் தங்களுடன் தொடர்புப்படுத்திக் கொள்ளும்படியாக எதுவும் இல்லை என்பதால் ஒரு கட்டத்துக்கு மேல படம் முடிந்தால் போதும் என்ற எண்ணம் வந்து விடுகிறது.
ஒரு சுவாரஸ்யமான ஃபேன்டஸி கதைக்கருவை கையில் எடுத்துக் கொண்ட போதிலும், அதில் எந்தவித மேஜிக்கும் செய்யாமல் வழக்கமான பழிவாங்கும் கதையை நோக்கி ஓடியதால், துல்கர் சல்மான் - நஹாஸ் ஹிதாயத் கூட்டணியின் இந்த ‘ஐ அம் கேம்’ ஒரு பிரம்மாண்டமான வாய்ப்பை தவறவிட்ட சுமார் படமாகவே மிஞ்சுகிறது.