

“நவீன தொழில்நுட்பங்களால் உருவாக்கப்படுவதல்ல நல்ல சினிமா. அது பார்வையாளர்களை மென் உணர்வுகளால் தொடுவது.” - இது, நல்ல சினிமாவின் வரையறையாக எழுத்தாளரும் இயக்குநருமான கிரீஷ் ஏ.டி ஒரு பேட்டியில் பதிவு செய்தது.
‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ இவருக்கு இயக்குநராக ஐந்தாவது படம், எழுத்தாளராக ஆறாவது படம். இன்னும் 4 ஆண்டுகளில் நூற்றாண்டு நெருங்கப் போகும் மலையாள சினிமா வரலாற்றில் இன்னமும் சொல்லப்படாத ஒரு கோணத்தில், மற்றுமொரு மெல்லுணர்வுக் காதல் கதையை எடுத்து, அதை ஓணம் வெளியீடாகவும் வெற்றித் திரைப்படமாகவும் மாற்றியிருக்கிறார், நவீன ரசவாதி கிரீஷ் ஏ.டி.
பொருளாதார காரணங்களால் வாழ்விடம் மாறிய வருத்தத்தில் இருப்பவர் கல்லாரி மாணவி ஆஷ்லி. அவரின் பக்கத்துக்கு வீட்டில், கடந்த காலத்தில் ஏற்பட்ட ஓர் இழப்பை மறைத்து உணவு ஏற்பாட்டாளராக வாழ்பவர் மத்திய வயது ஜஸ்டின். இவ்விருவரும் நிகழ்காலத்தில் பழக நேரும்போது, நிகழும் சம்பவங்களாலும் அவர்களை சூழ்ந்த கதாபாத்திரங்களாலும் அவர்கள் என்ன ஆகிறார்கள் என்பதே கதை. இப்படிப்பட்ட ஒரு மென் காதல் கதையை உணர்வுபூர்வமாகவும் ஆழமாகவும் அதே சமயத்தில் சிரிக்க சிரிக்க திரையில் சொன்னது பிகேயு -வின் முதல் வெற்றி.
நல்ல கதைக்கு கதை மாந்தர்கள் மட்டுமல்ல, கதைக்களமும் சுற்றுப்புறமம் மிகவும் முக்கியம். அதை தன் முதல் படமான ‘தண்ணீர் மத்தன் தினங்கள்’ முதல் கடைசியாக ஹிட் அடித்த ‘ப்ரேமலு’ வரை தீவிரமாக பதிவு செய்துருக்கிறார் கிரிஷ்.
நீண்ட காலத்துக்குப் பிறகு காதலின் ரசவாதத்தை, சட்டென்று தீப்பிடிக்கும் தருணமாகக் காட்டாமல், ஒரு சிறு தொட்டியில் பதியம் போட்டு நீரூற்றி வளர்த்த தொட்டி செடியில் மலரும் மலர்களாக மனங்கள் இணையும் தேவ கணத்தை சாவகாசமாகவும், சுவாரசியமாக காட்சிப்படுத்துயிருப்பது பிரமாதம்.
கூடுதலாக இம்முறை இசை சார்ந்த காதல் கதையாக சொன்னதும் சிறப்பு. யாரையும் குறிப்பிட்டு நல்லவராகவும் கெட்டவராகவும் கருப்பு வெள்ளையில் சித்தரிக்காமல் அவரவர் சாம்பல் குணநலன்களை அவரவர் சூழல்களோடு, தனிமையை, இழப்பின் காரணங்களோடு பயணித்திருப்பது அழகு.
வாழ்விடத்தையும் பழைய நட்பையும் தொலைத்து வாடும் கல்லூரி மாணவியாக, குறும்புக்கார பெண்ணாக, காதலில் உழலும் கதாபாத்திரமாக பல்வேறு உணர்வுகளையும் பிரமாதமாக வெளிப்படுத்தியிருக்கும் நாயகி மமிதா பைஜுவுக்கு இது முக்கியமான படம்.
அவரை விடவும், படத்தை தன்னந்தனியாக அனாயாசமாக தன் பண்பட்ட நடிப்பால் அதகளைப்படுத்தி இருக்கிறார் நிவின் பாலி. குறிப்பாக, மிக அரிதாகவே கவிதைகளிலும், சினிமாவிலும் வெளிப்படுத்தப்பதும் ஆணின் வெட்கத்தை மிக நேர்த்தியாகவும் ரசிக்கும்படியாகவும் வெளிப்படுத்தியிருப்பார். வயதின் உடல் மொழியையும் மரத்துப்போன உணர்வுகளை மீட்டுக்கொண்டு வருவதுமென சிறப்பாக நடித்திருக்கிறார் நிவின். சர்வம் மாயா, பிகேயு என இவரின் பொருத்தமான கதைத் தேர்வுகள் அட்டகாசம்.
குறும்படம் இயக்கும் தம்பி ஜோயலாக சங்கீத் பிரதாப், நண்பர் பைஜுவாக சுரேஷ் கிருஷ்ணா, மாமா அலெக்சாக வினய் ஃ போர்ட் என ஒரு நல்ல நட்சத்திர கூட்டமே துணைக் கதாபாத்திரங்களாக தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
கதைக்களமாக வரும் ஒரு சிறிய டவுன், படத்துக்கு வெகு அழகாகப் பொருந்திப் போகிறது. அடுத்தடுத்த வீடுகள், அவ்வூர் தேவாலயம் மற்றும் வீதிகள் என நம் நகரில் நடக்கும் ஓர் உண்மைச் சம்பவத்தைப் போலவே எடுத்திருப்பது பலம்.
ஒரு காட்சியில் ஆஷ்லியைக் காணாமல் தவித்து, தனியாக சந்திக்க நேர்ந்து, காரில் ஒன்றாகப் பயணித்து, சண்டையிட்டு பின் திரும்ப சேர்ந்து அவளை இறக்கிவிடும் மொத்த நிகழ்வும் மிகப் பிரமாதம்.
இவ்வளவு நேர்த்தியானதொரு ஒரு காதல் முன்மொழியும் காட்சி சமீபத்தில் திரையில் வந்ததில்லை. படத்தின் ஒற்றை வரி வெடிச் சிரிப்புகளையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். கல்லூரி ஆண்டு விழாவில் நடக்கும் களேபரம் சற்றே பெரிய நகைச்சுவை சிறுகதை. அதன் தொடக்கமும் முடிவும் சிறப்பாக அரங்கேற்றப்பட்டு இருக்கிறது.
கிட்டத்தட்ட மியூசிக்கல் லவ் ஸ்டோரி என்கிற அளவு இசையமைப்பாளர் விஷ்ணு விஜய் பாடல்களிலும் பின்னணி இசையிலும் பெரும் பங்காற்றியிருக்கிறார். வசனம் பேசாததை இசை பேசி விடுகிறது. வசனமும் இசையும் பேச முடியாத இடங்களை மவுனம் நிரப்பியிருக்கிறது. அஜ்மல் சாபுவின் துருத்தாத ஒளிப்பதிவும், ஆகாஷு வர்கீசின் படத்தொகுப்பும் பலம்.
ஆஷ்லியின் கிட்டார் கம்பியில் மீட்டப்பட்டு அதிரும் நரம்பும் ஜஸ்டினின் தீப்பெட்டி உரசலும் இணைப்பதில் அவர்களின் கதாபாத்திர நிறங்கள் தெரிந்துவிடுகிறது.
சிறு குறைகளும் இல்லாமலில்லை. ஜோயல் காதலியின் அண்ணனாக வரும் ஹரி கதாபாத்திரம் சற்றே ஓட்டாமல் தவிக்கிறது. அதேபோல தனித்து தெரியும் வினய் ஃபோர்ட்டின் சிறு கதாபாத்திரமும், படம் நெடுக வரும் குடி சம்பத்தப்பட்ட காட்சிகளும்.
40 வருடங்களுக்கும் முன்னர் வெளிவந்த ‘புன்னகை மன்னன்’ படத்தில் சாயலும் இதில் உண்டு. இழந்த காதலியின் நினைவில் வாடும் ஒரு மத்திய வயது ஆணுக்கும், ஒரு குறும்புக்கார பெண்ணுக்கும் இன்னொரு முறை பூக்கும் காதல். ஆனால், கதை சொன்ன விதத்தில் நம்மைக் கட்டிபோடுகிறது பிகேயு.
30 வகை காய்கறி, கூட்டு சேரும் ஓணம் சதய விருந்துகள் போல குவியும் வணிகத் திரைப்படங்களுக்கு மத்தியில், சிறு மண் பாத்திரத்தில் பரிமாறப்படும் குளிர் கூழ் போல எளிமையானதொரு திரைப்படத்தை மக்கள் குடும்பம் குடும்பமாக கொண்டாடுவதில் ஆச்சரியமேதும் இல்லை.