

கன்னடத்தில் வெளியான ‘கிஸ்’ படம் மூலம் நாயகியாக அறிமுகமான ஸ்ரீலீலா, தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். தமிழில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘பராசக்தி’ படத்தில் நடித்திருந்தார். இப்போது தனுஷின் 55-வது படத்தில் நடித்து வரும் அவர், இந்தியில் கார்த்திக் ஆர்யன் ஜோடியாக நடித்துள்ளார்.
அந்தந்த மொழிகளில் நடிக்கும்போது அம்மொழியில் பேசுவதுதான் அந்த மண்ணுக்கும் மக்களுக்கும் கொடுக்கும் மரியாதை என்றும், அது ரசிகர்களுடன் உணர்வுப்பூர்வமான பிணைப்பை ஏற்படுத்துகிறது என்றும் அவர் கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, “ஒவ்வொரு மொழியையும் நான் மதிக்கிறேன்.
நானே 4 அல்லது 5 மொழிகளில் பணிபுரிந்து வருகிறேன். நான் ஓர் இடத்துக்குச் செல்லும்போது, அங்கு மேடையில் இருந்தால், கண்டிப்பாக அந்த மாநில மொழியில் பேச முயல்கிறேன். அதுதான் அந்த மண்ணுக்கும், அவர்களின் மொழிக்கும் நான் கொடுக்கும் மரியாதை” என்று கூறியுள்ளார்.