

நடிகர் நாகார்ஜுனா
தெலங்கானா சைபர் பாதுகாப்பு பீரோ சார்பில் ஹைதராபாத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நாகார்ஜுனா கலந்துகொண்டார்.
அப்போதுஅவர் கூறியதாவது: என் தொலைபேசியை யாராவது ஹேக் செய்து விடுவார்களோ என்ற பயம் எப்போதும் இருக்கிறது. பாதுகாப்புக்காக 15 நாட்களுக்கு ஒருமுறை எனது பாஸ்வேர்டை மாற்றி விடுகிறேன். வீட்டு ‘வைஃபை’ பாஸ்வேர்டையும், மாதம் ஒரு முறை அல்லது 2 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றுகிறேன். பிரபலமாக இருப்பதால் கவனமாக இருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதனால் போனில் தனிப்பட்ட புகைப்படங்கள் எதையும் வைத்துக் கொள்வதில்லை.
சில ஆண்டுகளுக்கு முன்பு, வங்கி அதிகாரி என்று கூறிக் ஒருவர் தொலைபேசியில் அழைத்து, பங்குகள் மற்றும் ஈக்விட்டிகளில் முதலீடு செய்வது பற்றி பேசினார். நான் சம்மதிக்காதபோதும் தொடர்ந்து வற்புறுத்தினார். அது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுபோன்ற முதலீடு தொடர்பான தகவல்கள் வழக்கமாக எனது தனிப்பட்ட மானேஜர் மூலமாகவே எனக்கு வரும். இந்தச் சம்பவத்துக்கு பிறகு, முன்பின் தெரியாத அழைப்புகள் மற்றும் இணையப் பாதுகாப்பு விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்கத் தொடங்கினேன். என் உறவினர் ஒருவரும் இதுபோன்ற சைபர் மோசடியில் சிக்கினார். கஸ்டம்ஸ் அதிகாரிகள் எனக் கூறி அழைப்பு வந்தது.
ஈரானுக்கு அனுப்பப்பட்ட பார்சல் ஒன்றில் போதைப் பொருட்கள் இருப்பதாக மோசடி நபர்கள் தெரிவித்து, சுமார் 6 முதல் 7 மணி நேரம் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ என்ற பெயரில் அவரை மன ரீதியாக அச்சுறுத்தினர். அதிர்ஷ்டவசமாக, சைபர் க்ரைம் துறையைத் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்ததால் மோசடி அங்கேயே தடுக்கப்பட்டது. இது போன்ற மோசடிகள் சாதாரண பொது மக்களுக்கும் நடக்கிறது. சைபர் குற்றங்களைத் தடுப்பதில் தெலங்கானா போலீஸார் நாட்டிலேயே முன்னணியில் இருக்கின்றனர். இவ்வாறு நாகார்ஜுனா கூறினார்.