

நடிகர் யாஷ்
யாஷ் ஹீரோவாக நடித்த திரைப்படம் ‘டாக்ஸிக்’. கீது மோகன் தாஸ் இயக்கிய இப்படடததில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி உள்பட பலர் நடித்தனர்.
பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான இப்படம் ஆக.26-ல் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் இப்படத்தின் உருவாக்கத்தில் யாஷ் தலையீடு இருந்ததாகவும் படத்தின் தோல்விக்கு அதுவும் காரணம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் அந்தப் படத்தில் நடித்த அக் ஷய் ஓபராய் அதை மறுத்துள்ளார்.
“படப்பிடிப்பின் போது நான் பார்த்தவரை அப்படி ஏதும் நடக்கவில்லை. இப்படத்தைப் பார்க்கக் காசு கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கவும் படத்தை அலசி ஆராயவும் உரிமை இருக்கிறது.
தங்களின் தனிப்பட்ட சமூக ஊடக கணக்குகளில் அவர்கள் விரும்பியதை எழுதலாம். ஆனால், படப்பிடிப்புத் தளத்தில் நான் இருந்தேன்; கீது மோகன் தாஸ் தான் என்னை இயக்கினார் என்பது எனக்குத் தெரியும்.
யாஷை பொறுத்தவரை முற்றிலும் மாறுபட்ட நபர். நான் அவருடைய ரசிகன். அவரது ஆளுமைத் தன்மை முற்றிலும் தனித்துவமானது. அவருடன் பணியாற்றியபோது பெரிதும் ஈர்க்கப்பட்டேன். ஒரு கன்னடத் திரைப்படத்தை, மொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் அவர்.
‘டாக்ஸிக்’ படம் மூலம் கன்னடத் திரைஉலகை சர்வதேச நிலைக்குக் கொண்டு செல்ல விரும்பினார். அது கைகூடவில்லை என்றாலும், அவர் அதற்கான முயற்சியை மேற்கொண்டார்” என்று தெரிவித்துள்ளார்.