

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடித்துள்ள படம், ‘த டாக்ஸிக்’. ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் உருவாகியுள்ள இப்படம் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. மார்ச் 19-ல் ரிலீஸாகும் இப்படத்தில் கியாரா அத்வானி, நயன்தாரா, ஹூமா குரேஷி, ருக்மணி வசந்த், தாரா சுதாரியா உள்பட பலர் நடித்துள்ளனர்.
நடிகர் யாஷின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 8-ம் தேதி இதன் டீஸர், வெளியானது. அதில் ஆபாசமான காட்சிகள் இருப்பதாக அதன் இயக்குநர் கீது மோகன்தாஸுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், கர்நாடக மாநில ஆம் ஆத்மி கட்சியின் மகளிர் அமைப்பினர் இந்த டீஸருக்கு எதிராக மாநில மகளிர் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர்.
அதில், “டாக்ஸிக் படத்தின் டீஸரில் உள்ள ஆபாசமான மற்றும் வெளிப்படையான காட்சிகள் பெண்கள் மற்றும் குழந்தைகளின் சமூக நலனுக்குத் தீங்கு விளைவிப்பதாக இருக்கின்றன. வயது குறித்த எந்த எச்சரிக்கையும் இன்றி வெளியிடப்பட்டுள்ள இந்த டீஸர் பெண்களின் கண்ணியத்தை கெடுக்கிறது; கன்னட கலாச்சாரத்தை அவமதிப்பதாக உள்ளது.
சமூகத்துக்கு எதிரான, குறிப்பாக சிறார்களுக்குப் பாதகத்தை ஏற்படுத்தும் அந்த டீஸருக்கு தடை விதிக்கவும் சமூக வலைதளங்களில் இருந்து நீக்கவும் மாநில அரசிடம் ஆணையம் கோரிக்கை வைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.