

துருவா சர்ஜா நடித்துள்ள பான் இந்தியா படம், ‘கேடி: தி டெவில்’. இதில் சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி, வி.ரவிச்சந்திரன், ரமேஷ் அரவிந்த், ரீஷ்மா நானையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரேம் இயக்கியுள்ளார். ‘ஜனநாயகன்’ படத்தைத் தயாரித்துள்ள கே.வி.என் புரொடக் ஷன்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்திலிருந்து சமீபத்தில் குத்துப்பாடல் ஒன்று பல்வேறு மொழிகளில் வெளியானது. அப்பாடலில் நோரா ஃபதேஹி, சஞ்சய் தத் இணைந்து ஆடியிருந்தனர்.
இப்பாடலின் இந்திப் பதிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே கடும் எதிர்ப்பைச் சந்தித்தது. மது பாட்டிலை வர்ணிப்பதைப் போல ஆபாசமான வார்த்தைகள் இருப்பதாக சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்தன. தயாரிப்பு நிறுவனத்துக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து யூடியூப் தளத்தில் இருந்து இப்பாடல் நீக்கப்பட்டது.
நோரா ஃபதேஹி அளித்துள்ள விளக்கத்தில், “இந்தப் பாடலை 3 ஆண்டுகளுக்கு முன்பு கன்னடத்தில் படமாக்கினார்கள். இப்பாடலை வெளியிட்டபோது நானும் சஞ்சய் தத்தும் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. அவை செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டது.
அதை வெளியிடுவதற்கு என் அனுமதியைக் கூட கேட்கவில்லை. இந்தியில் அதன் அர்த்தத்தை மாற்றியதோ அல்லது அதில் இடம்பெற்ற ஆபாசமான வரிகள் பற்றியோ எனக்குத் தெரியாது. எனக்கும் அதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை” என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் இப்பாடலுக்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரை சேர்ந்த முஸ்லிம் தாருல் இஃப்தா அமைப்பின் தலைமை முஃப்தி மவுலானா இப்ராஹிம் ஹுசைன், நடிகை நோரா ஃபதேஹி-க்கு பத்வா விதித்துள்ளார்.
“இந்தப் பாடலில் இடம்பெற்றுள்ள காட்சிகள் மற்றும் வரிகள் அப்பட்டமான ஆபாசத்தைக் கொண்டுள்ளன. இது இஸ்லாமிய கலாச்சாரம் மற்றும் போதனைகளுக்கு முற்றிலும் எதிரானது. இத்தகைய செயல்களில் ஈடுபடுவதும், அதை ஊக்குவிப்பதும் இஸ்லாமிய சட்டப்படி மிகப்பெரிய பாவம்” என்று கூறியுள்ளார்.