

நடிகர் பிரகாஷ் ராஜ்
பெங்களூரு: நடிகர் பிரகாஷ் ராஜ் தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட 4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில் பெங்களூரு நீதிமன்றம் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
பெங்களூருவை சேர்ந்த வழக்கறிஞர் திலீப் குமார் கடந்த மார்ச்சில் பெங்களூரு 48-வது கூடுதல் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு எதிராக மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில்,”இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி 18 வயது நிரம்பிய நாட்டின் குடிமகன் ஒரு மாநிலத்தில் மட்டுமே வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். ஆனால் நடிகர் பிரகாஷ் ராஜ் கர்நாடகா, தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளார். இது சட்டவிரோதமானது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம், பிரகாஷ் ராஜ் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கடந்த ஏப்ரலில் உத்தரவிட்டது. ஆனால் அவர் நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது பிரகாஷ் ராஜ் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து நீதிமன்றம், பிரகாஷ் ராஜுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.