

மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’வின் நிர்வாகிகளுக்குள் நிலவும் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில் 4 உறுப்பினர்களுக்கு விளக்கம் கேட்டு அச்சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பிரபல மலையாள நடிகையான அன்சிபா ஹாசன் ‘த்ரிஷ்யம்’ படம் மூலம் பிரபலமானார். இவர் தமிழில், ‘கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை’, ‘கச்சேரி ஆரம்பம்’, ‘ஆறாவது வனம்’ உள்பட சில படங்களில் நடித்துள்ளார். இவர், மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’ அமைப்பின் இணைச் செயலாளர் பதவியில் இருந்து கடந்த பிப்ரவரியில் ராஜினாமா செய்தார். தனது ராஜினாமாவுக்கு, செயற்குழு உறுப்பினர் நடிகர் டினி டாம் கொடுத்த மன உளைச்சலே காரணம் என்று குற்றம் சாட்டினார்.
தன்னை அவர் ஜிகாதி என்று குறிப்பிட்டதாகவும், தான் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவதாக தவறான வதந்திகளைப் பரப்புவதாகவும் அன்சிபா குற்றம் சாட்டியிருந்தார். மேலும், சங்கத்தின் துணைத் தலைவர் லட்சுமி பிரியா தனது குடும்பப் பிரச்சினைகளைத் தனக்கு எதிராகப் பயன்படுத்தி, தன்னை போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்துச் சென்றதாகவும் அன்சிபா குற்றம்சாட்டினார் இது மலையாள திரைத்துறையில் பரபரப்பானது.
இந்தக் குற்றச்சாட்டுகளை டினி டாம் முற்றிலுமாக மறுத்தார். டினி டாமுக்கு ஆதரவாக லட்சுமி பிரியா கருத்து தெரிவித்திருந்தார். இதற்கிடையே தலைவர் ஸ்வேதா மேனனால் நியமிக்கப்பட்ட அலுவலக மேலாளரை, பொதுச் செயலாளர்குக்கு பரமேஸ்வரன் தன்னிச்சையாகப் பணிநீக்கம் செய்ததும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் ‘அம்மா’ அமைப்பு, அன்சிபா ஹாசன், குக்கு பரமேஸ்வரன், லட்சுமி பிரியா, நடிகர் டினி டாம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பிரச்சினைகள் குறித்து நேரில் விளக்கம் அளிக்க ஜூன் 1 முதல் 3-ம் தேதிக்குள் ஆஜராகுமாறு நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, தற்போதைய தலைமை மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்று அன்சிபா கூறியுள்ளார். தனது புகாரை முறையாக விசாரிக்க வேண்டும் என்றால், நடுநிலையான குழுவை அமைக்க வேண்டும் என்றும் விசாரணை முறையில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஜூன் 21-ல் ‘அம்மா’வின் பொதுக்குழு நடைபெறவுள்ள நிலையில், அதற்குள் இச் சிக்கலைச் சுமுகமாக முடிக்க தற்போதைய தலைமை முயற்சித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே அன்சிபாவின் நடுநிலையான குழு கோரிக்கையைத் துணைத் தலைவர் லட்சுமி பிரியா ஏற்க மறுத்துவிட்டார்.