

டிசம்பர் 12-ம் தேதி ’அகண்டா 2’ வெளியாகும் என்று விநியோகஸ்தர்களுக்கு தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலகிருஷ்ணா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் டிசம்பர் 5-ம் தேதி வெளியாகவிருந்த படம் ‘அகண்டா 2’. சென்னை உயர் நீதிமன்றத்தில் ஈராஸ் நிறுவனம் தொடுத்த வழக்கினால் இப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.
பின்பு புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஈராஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது ‘அகண்டா 2’ தயாரிப்பு நிறுவனமான 14 ரீல்ஸ் நிறுவனம்.
தற்போது அந்தப் பேச்சுவார்த்தைக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது. இன்று காலை சென்னை உயர் நீதிமன்றத்தில் சமரசத்துக்கான வழக்கு மற்றும் பணத்தை எப்படி திருப்ப தர உள்ளோம் என்பதை தயாரிப்பு நிறுவனம் தெரிவிக்கவுள்ளது. இதனால் ‘அகண்டா 2’ வெளியீட்டில் எந்தச் சிக்கலும் இல்லை என்பது உறுதியாகி இருக்கிறது.
மேலும், டிசம்பர் 12-ம் தேதி ‘அகண்டா 2’ வெளியாகும் எனவும், டிசம்பர் 11-ம் தேதி மாலை ப்ரீமியர் காட்சிகள் நடைபெறும் எனவும் விநியோகஸ்தர்களுக்கு தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போயப்பத்தி சீனு இயக்கத்தில் பாலகிருஷ்ணா, ஆதி, சம்யுக்தா மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அகண்டா 2’. முதல் பாகத்தில் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து 2-ம் பாகம் உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.