

நடிகை சுவாசிகா
மலையாள நடிகையான சுவாசிகா, தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில், லப்பர் பந்து, மாமன், நூறு சாமி உள்ளிட்ட படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய அவர், தெலுங்கில் இருமுடி படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான ‘ஆகாசம்லோ ஒக தாரா’ படத்தில் துல்கர் சல்மானுக்கு சகோதரியாக நடித்திருந்தார்.
இந்நிலையில் அவர் அளித்த பேட்டியில் கூறும்போது, “கதை கேட்கும்போது, எனக்கு ஆர்வத்தைத் தூண்டும் கதாபாத்திரங்களையே தேர்ந்தெடுப்பேன். நெகட்டிவ், பாசிட்டிவ் கதாபாத்திரமா, முழுநீள வேடமா என்று பார்ப்பதில்லை. அந்தக் கதாபாத்திரத்துடன் என்னால் எளிதில் பொருந்திப் போக முடிகிறதா என்றே பார்ப்பேன். கிடைக்கும் கதாபாத்திரத்தில் நம்முடைய பாணியில் நடித்து வெளிப்படுத்த ஒரே ஒரு காட்சி இருந்தாலும் கூட அந்தப் படத்தைத் தேர்ந்தெடுப்பேன்.
மலையாள சினிமாவில் உங்களைப் பார்க்க முடியவில்லையே என்று அடிக்கடி கேட்கிறார்கள். அதற்கான பதில் என்னிடம் இல்லை. நான் ஒருபோதும் மலையாள சினிமாவில் பணியாற்ற மாட்டேன் என்றோ, தமிழ், தெலுங்குப் படங்கள் எனக்கு முக்கியம் என்றோ எங்கும் சொன்னதில்லை. எனக்கு வாய்ப்புகள் கிடைக்காததற்குக் காரணம், மலையாள சினிமாவுக்கு என் தேவை இல்லை என்பதுதான். அதுதான் நேர்மையான உண்மை. நான் நடித்த கதாபாத்திரங்களைப் பற்றி திரைத்துறையில் உள்ளவர்கள் நல்ல விஷயங்களையே கூறியுள்ளனர். ஆனால் அவர்களால் எனக்கு ஏன் வாய்ப்புகள் வழங்க முடியவில்லை என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும்” என்று சுவாசிகா கூறினார்.