

ஹுமா குரேஷி
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் கதாநாயகனாக நடிக்கும் படம், ‘த டாக்ஸிக்’. இதில் கியாரா அத்வானி, நயன்தாரா, ஹூமா குரேஷி என பலர் நடிக்கின்றனர்.
கன்னடம், ஆங்கில மொழிகளில் உருவாகும் இந்தப் படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் படம் இது.
சமீபத்தில் விழா ஒன்றில் கலந்துகொண்ட நடிகை ஹுமா குரேஷியிடம் இப்படம் பற்றி கேட்டபோது, “அந்தப் படம் பற்றி இப்போது என்னால் பேச முடியாது. அது பெரிய திரைப்படம். அது பற்றி இப்போது பேசுவது நியாயமற்றது. அந்தப் படத்துக்குச் சிறப்பான அறிமுகம் தேவை என நினைக்கிறேன்.
தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ள நேரத்தில் அதுபற்றி பேசுவேன். என்றாலும் இந்தியாவின் மிகப்பெரிய படமாக ‘த டாக்ஸிக்’ இருக்கப் போகிறது. அது பார்வையாளர்களை நிச்சயமாக வியப்பில் ஆழ்த்தும். இதை ஒரு ரசிகையாகச் சொல்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.