

புரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் ‘ஸ்லம்டாக் 33 டெம்பிள் ரோடு’. இதில் சம்யுக்தா, தபு, துனியா விஜய், பிரம்மாஜி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இசை அமைத்துள்ளார். பூரி கனெக்ட்ஸ், ஜே.பி.மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
விஜய் சேதுபதி பேசும்போது, “புரி ஜெகன்நாத்தின் சினிமா பயணமும், வாழ்க்கை அனுபவங்களும் மிகவும் ஊக்கமளிப்பவை. பல ஆண்டு களாகத் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்கிறார். ஒரு கதையை முடித்தவுடன் அடுத்த கதையைப் பற்றி யோசிக்கத் தொடங்கிவிடுவார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு காலத்திலும் அவர் பல கதைகளை என்னிடம் பகிர்ந்திருக்கிறார். ஒவ்வொரு கதையும் தனித்துவமாகவும், சுவாரஸ்யமாகவும் இருந்தன.
ஒரு காட்சியை உருவாக்குவதிலும், அதைத் திரையில் வெளிப்படுத்துவதிலும் அவருக்கு இருக்கும் தெளிவு அபாரமானது. அவருக்கு என்ன வேண்டும், ஒரு ஃபிரேமில் என்ன இருக்க வேண்டும், எந்த அளவுக்கு இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த தெளிவு இருக்கும். அப்படிப்பட்ட இயக்குநருடன் பணியாற்றும் போது நடிகராக நமக்கு மிகுந்த நம்பிக்கையும், பாதுகாப்பான உணர்வும் கிடைக்கும். இப்படம் மிகவும் வலுவான கதையுடன் உருவாகியுள்ளது. ஆக் ஷன், உணர்வுகள், மனித உறவுகள் என அனைத்தும் இதில் இருக்கின்றன. புரி ஜெகன்நாத் சாரின் சிறந்த படங்களில் ஒன்றாக ‘ஸ்லம் டாக்’ இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.
இயக்குநர் புரி ஜெகன்நாத் கூறும்போது, “இப்படத்தின் கதை 2 உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. நம் அன்றாட வாழ்க்கையில் பல பிச்சைக்காரர்களைக் கடந்து செல்கிறோம். ஆனால் அவர்களின் பின்னால் இருக்கும் வாழ்க்கை, உணர்வுகள் மற்றும் கதைகளை நாம் பெரும்பாலும் அறிந்திருக்க மாட்டோம். அந்த மனிதர்களின் உலகத்தை மையமாகக் கொண்ட உணர்வுப் பூர்வமான கதையாக இப்படம் உருவாகியுள்ளது” என்றார்.