

ஹன்சிகா மோத்வானி முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் ஹாரர் த்ரில்லர் திரைப்படத்துக்கு ‘யட்சிணி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஆர்.கண்ணன், தனது மசாலா பிக்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்து இயக்கியுள்ள படத்துக்கு ‘காந்தாரி’ என்று தலைப்பு வைத்திருந்தனர். இப்போது ‘யட்சிணி’ என்று மாற்றியுள்ளனர். இதில் ஹன்சிகா 2 வேடங்களில் நடிக்கிறார்.
இதில் மெட்ரோ சிரிஷ், மயில்சாமி, தலைவாசல் விஜய், ‘ஆடுகளம்’ நரேன், வினோதினி, பவன், பிரிகிடா சகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மா.தொல்காப்பியன் எழுதிய கதைக்கு ஜி.தனஞ்செயன் திரைக்கதை அமைத்துள்ளார். ஸ்ரீனி செல்வராஜ் வசனம் எழுதியுள்ளார். பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு எல்.வி.முத்துகணேஷ் இசை அமைத்துள்ளார்.
“இதில் ஹன்சிகா, இந்து அறநிலையத்துறை அதிகாரி மற்றும் நரிக்குறவப் பெண் என 2 வேடங்களில் நடித்துள்ளார். நரிக்குறவப் பெண்ணாக நடிப்பதற்காக அந்தச் சமூகத்தினருடன் பழகி, அவர்களின் வாழ்க்கை முறையை அறிந்து பயிற்சியும் எடுத்திருக்கிறார்.
படத்தின் முக்கியமான காட்சிகளுக்காகச் சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் சுமார் ரூ.60 லட்சம் மதிப்பில் மலைக் குகை அரங்கு அமைக்கப்பட்டது. 1943-ம் ஆண்டில் நடைபெறும் பின்னணிக் காட்சிகள் இந்த அரங்கில் படமாக்கப்பட்டுள்ளன. முழுப் படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ள நிலையில், இறுதிக்கட்டப் பணிகள் நடை பெற்று வருகின்றன. டிசம்பரில் வெளியாகும்” என்று படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தின் தலைப்பு கேரளாவின் சோட்டானிக்கரா கோயிலில் வெளியிடப்பட்டது.