Published : 18 Mar 2023 11:49 AM
Last Updated : 18 Mar 2023 11:49 AM

அமித் ஷாவிடம் வாழ்த்து பெற்ற நடிகர் ராம் சரண், சிரஞ்சீவி

ராம் சரண், அமித் ஷா மற்றும் சிரஞ்சீவி

புதுடெல்லி: "உங்களுடைய வாழ்த்துக்கும் ஆசீர்வாதத்திற்கும் நன்றி அமித் ஷா ஜி" என நடிகர் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்வீட் செய்துள்ளார்.

ஆஸ்கர் விருது வென்ற "ஆர்ஆர்ஆர்" படக்குழு வெள்ளிக்கிழமை இந்தியா திரும்பியது. அந்த குழு இந்தியாவிலும் ஆஸ்கர் வெற்றியைக் கொண்டாடி வருகிறது. இந்நிலையில், "ஆர்ஆர்ஆர்" படத்தின் நாயகர்களில் ஒருவரான நடிகர் ராம் சரண், தனது தந்தை சிரஞ்சிவியுடன் டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அப்போது நடிகர் ராம் சரண், உள்துறை அமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்து பொன்னாடை போற்றினார். உள்துறை அமைச்சரும் ராம் சரணுக்கு பொன்னாடை வழங்கி, தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இதுகுறித்து, தெலுங்கு நடிகரும், ராம் சரணின் தந்தையுமான சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "ராம் சரணை வாழ்த்தி ஆசீர்வதித்ததற்காக நன்றி அமித் ஷா ஜி. ஆஸ்கர் விருது வென்று வந்துள்ள ஆர்ஆர்ஆர் படக்குழு சார்பாகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்வில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, வெள்ளிக்கிழமை டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திறங்கிய நடிகர் ராம் சரணை ரசிகர்கள் கூட்டம் வெள்ளமென சூழ்ந்துகொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அவரும் புன்னகையுடன் கைகளை அசைத்து ரசிகர்களின் வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ராம் சரண்,"நான் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறேன். அனைவருக்கும் நன்றி, எம்எம் கீரவாணி, எஸ்.எஸ்.ராஜமவுலி, சந்திரபோஸ் ஆகியோரால் நாங்கள் பெருமையடைகிறோம். அவர்களுடைய கடின உழைப்பால் நாங்கள் சிவப்பு கம்பள வரவேற்பு பெற்று, இந்தியாவுக்காக ஆஸ்கரையும் வென்றோம். "ஆர்ஆர்ஆர்" படத்தைப் பார்த்து, "நாட்டு நாட்டு" பாடலை வெற்றி பெற வைத்ததற்காக நான் வடக்கு முதல் தெற்கு வரை கிழக்கு முதல் மேற்கு வரை உள்ள அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். 'நாட்டு நாட்டு' பாடல் எங்களின் பாடல் இல்லை. அது இந்திய மக்களின் பாடல்" என்று தெரிவித்தார்.

முன்னதாக, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் உள்ள டால்பி திரையரங்கில் மார்ச் 13ம் தேதி நடந்த 95-ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறந்த ஒரிஜினில் பாடலுக்கான பிரிவில் இந்தியா சார்பில் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் விருதை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

— Chiranjeevi Konidela (@KChiruTweets) March 17, 2023

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x