Published : 02 Nov 2022 07:47 PM
Last Updated : 02 Nov 2022 07:47 PM

மீண்டும் திரையில் மலையாள நடிகர் சீனிவாசன் - ரசிகர்கள் உற்சாகம்

உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த மலையாள நடிகர் சீனிவாசன் மீண்டும் திரையில் தோன்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அவரது மகன் வினீத் சீனிவாசன் உறுதி செய்துள்ளார்.

மலையாள சினிமா உலகத்தில் தவிர்க்க முடியாத ஆளுமைகளில் ஒருவர் சீனிவாசன். இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத் திறமை கொண்டவர். இதுவரை 200-க்கும் மேற்ப்பட்ட திரைப்படங்களில் பணியாற்றியிருக்கிறார். மலையாள சினிமாவின் சிறந்த திரைக்கதை எழுத்தாளரான சீனிவாசன், கேரளாவின் சமூக மற்றும் அரசியல் சூழலை அடிப்படையாகக் கொண்ட திரைக்கதையால் அறியப்பட்டவர். கேரளாவின் மாநில விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர், 1998-ம் ஆண்டு வெளியான 'சிந்தாவிஷ்டாய ஸ்யாமலா' ( Chinthavishtayaya Shyamala) படத்திற்காக தேசிய விருது பெற்றார்.

இதனிடையே, இதய பிரச்சினை காரணமாக அண்மையில் அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் கடந்த சில மாதங்களாக அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கபட்டிருந்தார். இதனால், அவர் பெரிதாகப் படங்களில் நடிக்கவில்லை. உடல் ரீதியாக மிகவும் நலிவுற்று வீட்டிலேயே ஓய்வு எடுத்துவருகிறார். மலையாளத் தொலைக்காட்சி ஒன்று, மலையாள திரைக்கலைஞர்கள் சங்கமான அம்மா அமைப்போடு சேர்ந்து நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. அதில் நீண்ட இடைவெளிக்குப் பின்பு மேடையேறிய ஸ்ரீனிவாசனை, நடிகர் மோகன்லால் கன்னத்தில் முத்தமிட்டு வரவேற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ள இயக்குநரும், நடிகருமான வினீத் சீனிவாசன், ''அப்பாவின் உடல் நிலை தற்போது நல்ல முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. அவரது உடல்நிலையின் முன்னேற்றத்தைக்கண்டு நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறோம். அடுத்த மாதம் தொடங்க உள்ள 'குருக்கன்' (Kurukkan) படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்துகொள்வார் என நம்புகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

வினீத்தும் அவரது தந்தையும் கடைசியாக 2018 ஆம் ஆண்டு எம்.மோகனன் இயக்கத்தில் வெளியான 'அரவிந்தன்டே அதீதிகள்' (Aravindante Athidhikal) படத்தில் நடித்திருந்தனர். தற்போது தந்தையும் மகனும் இணைந்து ஜெயலால் திவாகரன் இயக்கும் 'குருக்கன்' படத்தில் நடிக்க உள்ளனர். மூத்த நடிகர் சீனிவாசன் மீண்டும் நடிக்க இருக்கும் செய்தி அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x