

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மோகன்லால். அவருக்குச் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் 80 வயது ரசிகை ஒருவர், மோகன்லாலைச் சந்தித்து தனது கனவை நிறைவேற்றியுள்ளார்.
கேரள மாநிலம் பெரும்பாவூர் பகுதியைச் சேர்ந்த லீலாமணி அம்மாள் என்பவர் மோகன்லாலின் தீவிர ரசிகை. அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்பது அவருடைய வாழ்நாள் கனவாக இருந்தது. இந்நிலையில் தனது ஊருக்கு அருகில் நடந்த படப்பிடிப்புக்கு வந்த மோகன் லாலை சந்தித்துப் பேசி, தனது கனவை அவர் நிறைவேற்றியுள்ளார்.
நடிகர் மோகன்லால் இப்போது ‘த்ரிஷ்யம் 3’ படத்தில் நடித்து வருகிறார். ஜீத்து ஜோசப் இயக்கும் இதன் படப்பிடிப்பு, பெரும்பாவூர் பகுதிகளில் நடந்து வருகிறது. இதையறிந்த லீலாமணி அம்மாள், தனது பேரன் ஷ்யாம் கிருஷ்ணாவுடன் அங்கு சென்று மோகன்லாலை சந்திக்க வேண்டும் என்றும் அது தனது வாழ்நாள் கனவு என்பதையும் படக்குழுவிடம் சொன்னார்.
அவர்கள் மோகன்லாலிடம் இதைச் சொன்னதும் அவர் லீலாமணி அம்மாவைச் சந்தித்துப் பேசினார். அவரை கட்டி அணைத்த மோகன்லால், அவர் குடும்பம் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டார். பின்னர் மோகன்லாலுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். நீண்ட நாள் கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் படப்பிடிப்பு தளத்திலிருந்து வீட்டுக்குச் சென்றார் லீலாமணி.