

இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தமிழ்,தெலுங்கு, இந்தி, ஹாலிவுட் படங்களுக்கு இசை அமைத்து வருகிறார். அவரும் அவரது மனைவி சாய்ரா பானுவும் கடந்த 2024-ம் ஆண்டு பிரிந்தனர். அவர்களுக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் சினிமா புகழ் தன்னுடைய குடும்ப வாழ்க்கையைப் பாதித்ததாக ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: திருமண விழாக்களுக்குச் சென்றாலும் அங்கே என்னால் சாப்பிட முடியாது. ரசிகர்கள் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று சூழ்ந்து விடுவார்கள். ‘நான் சாப்பிடுகிறேன்’ என்று சொல்வேன். அவர்கள் ‘நாங்க போகணும், அவசரம்’ என்பார்கள். அவர்கள் மற்றவர்களைப் புரிந்துகொள்ள மாட்டார்கள். இதனால் திருமணங்களில் நான் சாப்பிடுவதில்லை. வாழ்த்து சொல்லிவிட்டு வெளியேறி விடுவேன். இதுதான் என் குடும்ப வாழ்க்கையைப் பாதித்தது.
வெளிநாட்டு ராக் ஸ்டார்களிடமோ, ஹாலிவுட் நடிகர்களிடமோ இப்படிக் கேட்க முடியாது. அவர்கள் நேரடியாக மறுத்து விடுவார்கள். அதனால் ரசிகர்கள் அவர்களிடம் அப்படிக் கேட்கவே மாட்டார்கள். இந்திய திரை பிரபலங்கள் கொஞ்சம் மென்மையாகப் பேசுபவர்கள் என்பதால் இப்படிக் கேட்கிறார்கள்.
அனைத்து இயக்குநர்களும் எனக்கு நண்பர்கள்தான். வேலைப்பளு காரணமாக அவர்களுடன் நேரம் செலவிட முடியவில்லை. குடும்ப உறுப்பினர்களும் அவர்களுக்கான வாழ்க்கையில் பிசியாக இருப்பதால் அவர்களை ஒன்றிணைத்து உணவு விருந்துகளில் கலந்து கொள்வதும் கடினமாக உள்ளது. இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் கூறினார்.