தெறிப்புத் திரை 2 | கெட்டியோலானு என்டே மாலாகா - புரிதலற்ற திருமணங்களை தோலுரிக்கும் சலச்சித்திரம்!

தெறிப்புத் திரை 2 | கெட்டியோலானு என்டே மாலாகா - புரிதலற்ற திருமணங்களை தோலுரிக்கும் சலச்சித்திரம்!
Updated on
3 min read

'இதைப் பற்றியெல்லாம் வெளியில் பேசவேக்கூடாது' என சமூகம் சென்சார் செய்த விஷயங்கள் குறித்து எந்த வித மறுப்பு கேள்வியும் கேட்காமல் அப்படியே விழுங்கிவிடுகிறோம். பேசப்படாத அந்தச் சொற்கள் தேங்கி அழுகிவிடுகின்றன. இறுதிவரை அந்த வார்த்தைகள் பயன்படுத்தப்படாமலேயே இறந்தும் விடுகின்றன. பேசத் தயங்கிய அந்த வார்த்தை வாழ்வின் மிகப்பெரிய சிக்கல்களுக்கு காரணமாகிவிடுகிறது. அப்படியாக நாம் பேசத் தயங்கி, கூச்சப்படும் விஷயங்களை உடைத்துப் பேசுகிறது 'கெட்டியோலானு என்டே மாலாக்கா' (Kettyolaanu Ente Malakha) மலையாள படம். பாலியல் கல்வி குறித்த எந்தப் புரிதலும் இல்லாத திருமணங்கள் உண்மையில் எவ்வளவு ஆபத்தானவை என்பதை வெளிச்சம் போட்டு காட்டுவதுடன், 'மேரிட்டல் ரேப்' என்ற முக்கியமான பிரச்சினையை மையமாகக் கொண்ட இந்தப் படம் அமேசான் பிரைமில் காணக் கிடைக்கிறது.

ஸ்லீவாச்சனாக ஆசீப் அலி. ஊரறிந்த உத்தமர். பெண்களிடம் பழகாத, அவர்களைத் தொடக்கூட துணியாத, சமூகம் கட்டியெழுப்பியிருக்கும் நல்லவனுக்கான அனைத்து அடையாளங்களையும் ஒருங்கே வாய்க்கப்பெற்ற 30 வயதேயான அப்பாவி மனிதர். திருமணத்தின் மீது ஸ்லீவாச்சுனுக்கு பெரிய ஈடுபாடெல்லாம் இல்லை. அக்கா, அம்மா என பலரும் வற்புறுத்தியும் திருமண பந்ததுக்குள் நுழைய விரும்பாதவர். தாயுடன் வசித்து வரும் ஸ்லீவாச்சன் இல்லாத நேரத்தில் அவரது தாய் மயங்கி விழுந்துவிடுகிறார். உடனே, தாயை பார்த்துக்கொள்ளும் ஒரு கேர் டேக்கரை தேடுகிறார். அவருக்கு சம்பளம் கொடுக்கவேண்டும், முழுநாளும் அந்த கேர் டேக்கர் உடன் இருக்கமாட்டார் போன்ற கட்டாயத்தாலோ என்னவோ, இவையெல்லாம் ஒருங்கே அமைந்த 'மனைவி' எனும் பேக்கேஜை தேர்வு செய்கிறார். அங்கு ஆரம்பிக்கிறது 'கதை'.

சமையல் செய்யவும், தாயை பார்த்துக்கொள்ளவும், வீட்டை கவனித்துக்கொள்ளவும், திருமணம் என்ற பெயரில் வழங்கப்படும் இத்தனை ஆஃபரையும் பெற்றுக்கொள்ள முடிவு செய்து திருமணத்திற்கு ஏற்பாடாகிறது. தொடர்ந்து திருமணத்திற்கு பிறகு அவர்களின் உறவில் என்ன நடக்கிறது, அதில் ஏற்படும் சிக்கல்கள் என்ன என்பது குறித்து விரிவாக பேசும் படம் தான் ' 'கெட்டியோலானு என்டே மாலாக்கா'. 'என் மனைவியே எனக்கு தேவதை' என்பதுதான் இதன் தமிழாக்கம்.

இங்கே ஆசீஃப் அலி என்பது ஒட்டுமொத்த ஆண்களின் குறியீடாகத்தான் காட்டப்படுகிறார். பெரும்பாலான திருமணங்கள் மேற்கண்ட ஏதோ ஒரு காரணத்துக்காகத்தான் நடக்கிறது என்ற உண்மையை படம் தொடக்கத்திலேயே உடைக்கிறது. தாயை பார்த்துக்கொள்ள வேண்டும் அல்லது வழக்கமான டெம்ப்ளேட்டான, 'கால் கட்டு போட்டா திருந்திடுவான்' என ஆண்களை திருத்துவதற்கும், அவர்களின் குடும்பத்தின் 'கேர் டேக்கராக'வும் தான் திருமணங்கள் முடிக்கப்படுகின்றன. தவிர, திருமணம் குறித்தும், உறவு குறித்தும் முறையான எந்த புரிதலும் சமூகத்தில் இல்லை என்பதிலிருந்தே படம் தொடங்குகிறது.

ஆசீஃப் அலி எந்த அளவுக்கு அப்பாவி என்றால், திருமணத்திற்கு முன்பு, மனைவியாகப்போகும் வீணா நந்தகுமார் தொலைபேசியில் பேசும்போது கூட தாயிடம் செல்போனை கொண்டுபோய் கொடுக்கும் அளவுக்கு சமூகத்தின் நல்லவன் அளவுக்கோலுக்கு பக்காவாக பொருந்தக் கூடியவர். கூடவே மணமுடித்த பிறகான தாம்பத்ய வாழ்க்கை குறித்து பாதிரியார் ஒருவர் சர்ச்சில் பாடம் எடுப்பார். அதையெல்லாம் கேட்க கூடாது என அதிலிருந்து நழுவி ஓடிவிடுவார் ஆசீஃப் அலி.

அந்த அளவிற்கு அவர் நல்ல ஆண் என நினைத்துவிட்டு, ஆசீப் அலியிடம் பேசும் பாதிரியார், 'அந்த பொண்ணு ரொம்ப கொடுத்துவச்சவ' என கூறும்போது இந்த ஒட்டுமொத்த சமூகத்தின் குரலாகவே அந்த ஃபாதரின் குரல் ஒலிக்கும். தான் சொன்ன அந்த வார்த்தைக்கு பின்னாளில் அவரே வருந்துகிறார் என்பது வேறு விஷயம். இருப்பினும், 'பாலியல் கல்வி'யை புறக்கணிப்பதே பெருமையாக கொள்ளும் ஒரு சமூகத்தில் தான் நாம் வாழ்கிறோம் என்பதை உரைக்கிறது படம். பாலியல் கல்வி குறித்த முறையான எந்தப் புரிதலும் இல்லாத திருமணங்கள் உண்மையில் எவ்வளவு ஆபத்தானவை என்பதை படம் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

படம் 'மேரிட்டல் ரேப்' என்ற முக்கியமான பிரச்சினையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. காரணம், பெண் என்பவள் சமூகத்தின் உடைமை. திருமணம் எனும் லைசன்ஸை கொண்டு அவளை எளிதில் பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற பொதுப்புத்தி சிந்தனையை தோலுரிக்கும் இடத்தில் படம் கவனம் பெறுகிறது. 'எனக்கு மூன்று குழந்தைகள். ஆனால் அவர்களை எப்படி பெற்றேன் என்பதே தெரியவில்லை' என படத்தில் பெண் ஒருவர் பேசும் வசனம் வரும்.

இந்தப் புள்ளியிலிருந்தே படத்தின் மொத்த உரையாடலையும் தொடங்கலாம். பெண்ணுக்கான தேவையும், விருப்பமும் அனைத்து மட்டங்களிலும் புறந்ததள்ளப்படும் ஆண் மையவாத உலகில் பாலியல் உறவிலும் முற்றிலும் மறுக்கப்படுகிறது என்பதை மேற்கண்ட வசனம் புரிய வைக்கிறது. அந்தப் பெண் போலிச் சிரிப்புடன் பேசும் அந்த வசனம் உண்மையில் ஆண்களை நோக்கி வீசும் அம்பு. பொதுவாகவே ஆண்கள் தங்கள் தேவை தீர்ந்த பின் உறவிலிருந்து விடுபடும்போக்கு, மனைவியின் விருப்பம் குறித்து எந்த கேள்வியும் கேட்காமல் உறவுகொள்வது என்பதை தான் படம் விவரிக்கிறது.

திருமணமாகிவிட்டது என்பதாலேயே இயல்பாகவே மனைவி உறவுக்கு ஒப்புதல் அளித்துவிடுவார் என ஆண்மைய பார்வையில் தாங்கள் நினைத்தையெல்லாம் ஆண்கள் நிகழ்த்திவிடுகின்றன. இவையனைத்துமே ஒரு பக்கம் சார்பு கொண்டவை. இந்தப் பிரச்சினைகளை பெண்களால் வெளியில் உடைத்து பேச முடியாது என்பதும் கணவன்களுக்கான பலம். திருமணமாகிவிட்டது என்பதாலேயே, 'மேரிட்டல் ரேப்' பிரச்சினையை யாரும் பெரிதாக கண்டுகொள்வதில்லை என்பதை படம் அழுத்தமாக முன்வைக்கிறது. ஆண்கள் அசால்ட்டாக கடக்கும் இந்தப் பிரச்சினையை படம் நின்று நிதானித்து விளக்குகிறது.

கணவன் உட்பட குடும்பத்திலிருக்கும் யாராலும் அந்தப் பெண்ணின் வலியை உணர முடிவதில்லை. அவளின் வாதங்கள் அங்கே எடுபடுவதில்லை. 'அவன் நல்லவன். சரியாயிடுவான்' என ஆசீஃப் அலி குறித்து அவர் தாய் பேசும் வசனங்கள் எந்தப் பெண்ணுக்கும் எரிச்சலூட்டுபவை. 'பொறுத்துக்கோ' என்பதுதான் பெண்களுக்கு காலம் காலமாக கொடுக்கப்படும் அறிவுரையாகவும் இருக்கிறது. நுட்பமான ஒரு பிரச்சினையை அழகாக எடுத்துரைத்திருக்கும் இயக்குநர் நிசாம் பஷீர் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியவர்.

ஆனால், பெண் என்பவள் எப்போதும் மன்னிக்கூடியவளாகவே தான் இருக்கிறாள். இந்தப் படத்திலும் அதேதான் நிகழ்கிறது. என்றாலும், இறுதியில் மனைவிக்கு ஆசீஃப் அலி கொடுக்கும் ஸ்பேஸ் மிகவும் முக்கியமானது. அந்த மாற்றம்தான் தேவை என்கிறது படம். 'மனிதனை தவிரத்த மற்ற எந்த உயிரினமும் ஒருபோதும் ஒன்றை காயப்படுத்தி மற்றொன்றிடம் உறவு கொள்வதில்லை. மாறாக மனதில் வைத்திருக்கும் அன்பில் மூலம் உறவு கொள்கிறது' என்ற வசனம் கவனிக்க வைக்கிறது. க்ளைமேக்ஸ் காட்சிகளில் கெட்டியான பனிக்கட்டி ஒன்று உருகி வழிவதைப்போல, அதுவரை இருந்த எல்லா இருக்கங்களும் தளர்ந்து 'ஃபீல் குட்' உணர்வைத் தருகிறது.

'பாலியல் கல்வி' குறித்தோ, திருமணம் குறித்தோ எந்த புரிதலும் இல்லாமல், தேமே' வென நடக்கும் திருமணங்களும், அதனால் பாதிக்கப்படும் பெண்களின் குரலையும் சேர்த்தே பதிவு செய்யும் விதத்தில் படத்தை நிச்சயம் பாராட்டலாம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in