தெறிப்புத் திரை - 1 | அவள் அப்படித்தான்: அழுத்தும் சமூகத்தில் எதற்கும் துணிந்தவள்!
1978-ம் ஆண்டில் இயக்குநர் ருத்ரய்யா நமக்கெல்லாம் ஒரு கதை சொல்கிறார். அந்தக் கதையில் இந்த 'சோ கால்டு' சொசைட்டி சென்சார் செய்த சொற்களையெல்லாம் தேடிப்பிடித்து கோத்து வார்த்தையாக்கி வசனங்களாக வைக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக, எந்த மாதிரியான பெண் கதாபாத்திரத்தை இச்சமூகம் வெறுக்கிறதோ, ஒரு பெண் இப்படியெல்லாம் இருக்கவே கூடாது என தொடர்ந்து பாடம் எடுக்கப்படுகிறதோ, அதையெல்லாம் சேகரித்து ஒரு பெண் கதாபாத்திரத்தை 'ஸ்கெட்ச்' செய்திருக்கிறார் ருத்ரய்யா. அந்தப் பெண் கதாபாத்திரத்தை மையப்படுத்தியும், பெண்பாலை அடிப்படையாக கொண்டு படத்தின் தலைப்பையும் வைத்து மிரட்டியிருக்கிறார். அவரது மஞ்சு கதாபாத்திரம் காலம் கடந்தும் வியப்பை ஏற்படுத்துவது ஏன்? - வாருங்கள் 'தெறிப்புத் திரை'யின் முதல் அத்தியாயத்தில் அலசுவோம்.
கைவிடப்பட்ட காட்டில் சுற்றித் திரியும் மான் ஒன்று ஆறுதலைத் தேடி ஓடிக்கொண்டிருக்கிறது. ஓடி ஓடித் தேய்ந்த அதன் கால்கள், சூரியனின் வெம்மை தாழாமல் நிழலைத் தேடுகிறது. அகப்பட்ட நிழலருகில் மூச்சிறைத்து நின்றுகொண்டிருந்த அந்த ஆறுதல் தேடிய மானை, மாறுவேடம் தரித்த புலியொன்று ஏமாற்றி வேட்டையாடிவிடுகிறது. தொடர் வேட்டையாடல்களும், ஏமாற்றங்களும், ஆறுதலில்லா இந்த உலகின் அத்தனையும் அந்த மானுக்கு வெறுப்பையே உமிழ்கின்றன. அப்படியான ஓர் உலகம் தான் 'மஞ்சு' பிரவேசிப்பது. ஆணாதிக்கம் நிறைந்த அத்தியாயங்களால் எழுதப்பட்ட அவளின் உலகிற்குள் நம்மை கொஞ்சம் கொஞ்சமாக கைப்பிடித்து அழைத்துச் செல்கிறார் இயக்குநர் ருத்ரய்யா.
'மஞ்சு' கதாபாத்திரம், அதுவரை தமிழ் சினிமா கண்டிராத ஒரு புதுவித பாத்திரப் படைப்பு. பெண்கள் குறித்து சமூகம் வரையறுத்து வைத்துள்ள வழக்கமான டெம்ப்ளேட்டுகளான அடக்கம், அமைதி, கீழ்படிதல், சிணுங்கல் என்ற எதையுமே அந்தக் கதாபாத்திரத்தில் ஒரு காட்சியிலும் காண முடியாது. படம் நெடுங்கிலும் மஞ்சுவாக நடித்துள்ள ஸ்ரீப்ரியாவின் உடல்மொழியில் எப்போதும் ஒரு கெத்து ஒட்டிகொண்டேயிருக்கும். அதேபோல, எந்த இடத்திலும் பதற்றத்துடனோ, பயத்துடனோ, அழுதுகொண்டேயிருக்கும் பெண்ணாக மஞ்சுவை பார்க்கவே முடியாது. சொல்லப்போனால் இதுபோன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தக்கூடிய தேவையான அனைத்து காரணங்களும் அவளிடம் இருக்கும். ஆனால், அவள் அப்படியில்லை. ஏனென்றால் 'அவள் அப்படித்தான்'!
இதற்கு மஞ்சுவே அழகாக பதில் சொல்லியிருப்பாள். காதலனால் பயன்படுத்தப்பட்டு ஏமாந்து நிற்கும்போது கூட, 'அதுக்காக மூக்குறிஞ்சிக்கிட்டு, மூலையில நிற்க கூடாது; எதிர்த்துப் போராடணும்' என தனக்கே உண்டான உடல்மொழியுடன் வெடித்து சிதறுவாள். மஞ்சுவைப்போன்ற பெண்களை இச்சமூகம் ஒருபோதும் ஏற்றுக்கொள்வதில்லை. குறிப்பாக, 'கல்யாணம் மாதிரியான டிராமாவுல எல்லாம் எனக்கு எப்போதும் நம்பிக்கையில்ல' என பேசும் ஒரு பெண்ணை இச்சமூகம் எப்படி பார்க்கிறது என்பதையும் ரஜினியின் கதாபாத்திரம் மூலமாக தெளிவாக சொல்லியிருப்பார் ருத்ரய்யா.
படத்தில் மொத்த சமூகத்தின் உருவாக ரஜினி கதாபாத்திரம் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். ரஜினி பேசும் வசனங்கள் அனைத்தும் பொது சமூகத்தின் வார்த்தைகள்தான். 'பொண்ணுக்கு தான் சொந்த கால்ல நிக்கணும்ங்குற எண்ணம் மட்டும் இருக்க கூடாது. இன்டிபெண்டென்டா ஒரு பொண்ணு இருக்க முடியாது. எப்போதுமே சார்ந்துதான் வாழ்ந்தாகணும்'' என்பது போன்ற வசனங்கள் அன்றாடம் புழங்கும் சமூகத்தின் வார்த்தைகளாக எழுதப்பட்டிருக்கும்.
'ப்ரிமேரிடல் செக்ஸ்' என ஒரு பெண் பேசுவதெல்லாம் 1978-களில் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்று. அந்தக் காலக்கட்டத்தில் 'மஞ்சு' கதாபாத்திர வார்ப்பைக் கண்டு விதந்தோத வேண்டியிருக்கிறது. பெண் கல்வி, வேலை மறுதலிக்கப்பட்ட ஒரு காலத்தில் வெளியிடப்பட்ட தைரியமான படைப்பாகத்தான் 'அவள் அப்படித்தான்' படத்தை பார்க்க வேண்டியிருக்கிறது.
மஞ்சுவைப் பொறுத்தவரை அவள் எதற்கும் கவலைப்படாதவள். வேலை இழந்து நிற்கும் காட்சியில்கூட, 'வேல தானே போச்சு... எழவா விழுந்துச்சு' என அசால்டாக கடப்பவள். எல்லாவற்றையும் லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்யும் அந்தக் கதாபாத்திரம் ஒரு கற்பனை முகம் என்று கடந்துபோய்விட முடியாது. அவர்போல் உண்மை முகத்துடன் நம் சமூகத்தில் நிஜ உருவில் மிகச் சிலர் வலம் வருவது ஆறுதலுக்கு உரியது.
மஞ்சுவுக்கு தன்னை கிண்டல் செய்யும் ஒருவரின் பின்னால் நின்று கண்ணை கசக்கிக் கொண்டு அழத் தெரியாது. எதுவாக இருந்தாலும் நேரடியாக எதிர்த்து பேசுவதுதான் அவளின் குணம். ''கண்ட கண்ட ஆம்பளைங்க கூட சுத்துறா. செக்ஸ பத்தி பேசுறா'' என்று தன் முதுக்குக்குப் புறம்பேசும் சக அலுவலக பெண்ணின் முகத்துக்கு நேரடியாக 'தேவைப்பட்டா உங்க புருஷன்கூட சுத்துவேன்' என்று திக்குமுக்காட வைப்பாள்.
உண்மையில், எல்லா பெண்களுக்குள்ளும் இருக்கும் ஒரு நிழல் கதாபாத்திரம்தான் மஞ்சு. சமூகத்தின் அழுத்தங்களால் மஞ்சுக்கள் அடிபணிந்து கிடக்கிறார்கள். காதலன் ஏமாற்றியபோதும் அவளிடம் போய், 'ஏத்துக்கோ' என்று இறைஞ்சி நிற்காத யாருக்கும் வளைந்து கொடுக்காதவளுக்கு ஏற்ற க்ளைமேக்ஸைத்தான் ருத்ரய்யா எழுதியிருப்பார். காலம் கடந்து வந்து சேர்ந்த ஒரு புதிய உறவு இறுதியில் பிரிந்து செல்லும்போது கூட அவள் அதை ஏற்றுக்கொண்டு கடக்கும் மனவலிமை மிக்கவள்.
இறுதிக்காட்சியில், கமலின் மனைவியிடம் பேசும் மஞ்சு, 'பெண் சுதந்திரம் பற்றி என்ன நினைக்கிறீங்க' என்று கேட்பாள். அதற்கு அந்தப் பெண், 'அதபத்தி எனக்கு எதுவும் தெரியாது' என்றவுடன் 'அதனாலதான் நீங்க சந்தோஷமா இருக்கீங்க' என்று பேசும் வாக்கியம் அடர்த்தியானது!
''எரிந்து போன வீடு; முறிந்து போன உறவுகள்; களைந்து போன கனவுகள்; சுமக்க முடியாத சோகங்கள்; மீண்டும் ஒருமுறை மஞ்சு இறந்துபோனால், இந்த சாவை சகித்துக்கொள்ள மஞ்சுவாள் தான் முடியும். அவள் பிறப்பாள், இறப்பாள்.. அவள் அப்படித்தான்!'' என்ற இறுதி வசனம் ஒலிக்க தனியாக நின்றுகொண்டிருப்பாள் மஞ்சு... உண்மையில் மஞ்சு அப்படித்தான்!
(இப்படம் யூடியூபிலும் காணக் கிடைக்கிறது.)
