

வட இந்தியாவில் 'கேஜிஎஃப் 2' திரைப்படம் முன்பதிவில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் சாதனையை முறியடித்துள்ளது. மொத்தமாக, இதுவரை ரூ.20 கோடிக்கு மேல் முன்பதிவில் மட்டும் இந்தப் படம் வசூலித்து சாதனை படைத்துள்ளது.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், ரவீனா டண்டன், சஞ்சய் தத் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள படம் 'கேஜிஎஃப் 2'. இப்படத்தின் முதல் பாகம் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றதால் அதன் இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. படம் வருகின்ற 14-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இதன் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வட இந்தியாவில் இந்தப் படத்தின் இந்திப் பதிப்பில் மட்டும் ரூ.11 கோடி அளவில் டிக்கெட் முன்பதிவு நடைபெற்றுள்ளது. 'ஆர்ஆர்ஆர்' படத்தை பொறுத்தவரை இந்திய பதிப்பில் 5 கோடி ரூபாய் அளவில் முன்பதிவு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்திப் பதிப்பு உள்ளடக்கிய மற்ற மொழிகளைச் சேர்த்து வட இந்தியாவில் இதுவரை மொத்தம் முன்பதிவில் மட்டும் 'கே.ஜி.எஃப் 2' திரைப்படத்தின் டிக்கெட்டுகள் 20 கோடி ரூபாய் அளவில் விற்றுத் தீர்ந்துள்ளன. வட இந்தியாவில் 'கே.ஜி.எஃப் 2' மீதான எதிர்பார்ப்பை இந்த வசூலை வைத்தே அறிந்துகொள்ள முடியும். கர்நாடகத்திற்கு வெளியே, ஒட்டுமொத்தமாக உலக அளவில் ரூ.250 கோடியை கே.ஜி.எஃப் முதல் பாகம் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.