நடிகர் சிரஞ்சீவிக்கு கரோனா தொற்று உறுதி

நடிகர் சிரஞ்சீவிக்கு கரோனா தொற்று உறுதி
Updated on
1 min read

நடிகர் சிரஞ்சீவி தனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கரோனா அச்சுறுத்தல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் தற்போது 3-வது அலை தொடங்கிவிட்டதால், தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. கரோனா வைரஸின் உருமாற்ற டெல்டா வைரஸ் பரவுவதோடு, தற்போது ஒமைக்ரான் வைரஸ் பரவலும் அதிகரித்து வருகிறது.

திரையுலக பிரபலங்கள் மகேஷ் பாபு, அருண் விஜய், விஷ்ணு விஷால், சத்யராஜ், த்ரிஷா, குஷ்பு, மீனா, இசையமைப்பாளர் தமன், மம்முட்டி, செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் பலரும் தற்போது தொற்றிலிருந்து குணமடைந்து விட்டனர்.

இந்நிலையில் நடிகர் சிரஞ்சீவி தனக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது:

அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டும் நேற்று (ஜன 25) இரவு எனக்கு லேசான அறிகுறிகளுடன் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். கடந்த சில நாட்களில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் தங்களை பரிசோதித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். விரைவில் உங்கள் அனைவரையும் சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன்.

இவ்வாறு சிரஞ்சீவி கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in