'ஆர்ஆர்ஆர்' வெளியீடு ஒத்திவைப்பு: படக்குழு அறிவிப்பு

'ஆர்ஆர்ஆர்' வெளியீடு ஒத்திவைப்பு: படக்குழு அறிவிப்பு
Updated on
1 min read

கரோனா அச்சம் காரணமாக 'ஆர்ஆர்ஆர்’ படத்தின் வெளியீட்டைத் தேதி குறிப்பிடாமல் படக்குழு தள்ளி வைத்துள்ளது.

ராஜமெளலி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்'. இதில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டிவிவி நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஜனவரி 7ஆம் தேதி அன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான விளம்பரப் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வந்தன. இதற்காக இந்தியா முழுவதும் படக்குழு பயணம் செய்து பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியது.

இந்நிலையில் கரோனா அச்சம் காரணமாக ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் வெளியீட்டைப் படக்குழு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.

இதுகுறித்து ’ஆர்ஆர்ஆர்’ படக்குழு வெளியிட்ட அறிவிப்பில், “இடைவிடாத முயற்சியைத் தாண்டியும் சில சமயங்களில் சூழ்நிலை நம் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் சென்றுவிடும். இந்திய மாநிலங்கள் பல திரையரங்குகளை மூடவுள்ளன. எங்களுக்கு வேறு எந்த வாய்ப்பும் இல்லை. நிச்சயமாக இந்திய சினிமாவின் பெருமையைச் சரியான நேரத்தில் நாங்கள் வெளியிடுவோம்” என்று தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பல மாநிலங்களில் கரோனா தொற்று சற்று அதிகரித்து வருவதால் திரையரங்குகளை மூடவும், 50% இருக்கைகளுக்கு அனுமதி அளித்தும் மாநிலங்கள் அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in