போதை மருந்து வழக்கில் சார்மி, ரகுல்பிரீத் சிங் உட்பட 12 பேருக்கு சம்மன்

போதை மருந்து வழக்கில் சார்மி, ரகுல்பிரீத் சிங் உட்பட 12 பேருக்கு சம்மன்
Updated on
1 min read

தெலுங்கு திரையுலக நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் ஆகியோருக்கும் போதை மருந்து கும்பலுக்கும் தொடர்பு இருப்பதாக கடந்த 2017-ம் ஆண்டு கலால் துறை அதிகாரிகள், நடிகை சார்மி, மொமைத்கான், இயக்குனர் பூரி ஜெகன்நாத், நடிகர் ரவிதேஜா, ராணா, தருண், தனீஷ், நந்து, நவ்தீப் உட்பட வெளிநாட்டை சேர்த்த சிலரிடம் விசாரணை நடத்தினர்.

ஆனால், இவர்கள் அனைவரும் வெறும் சாட்சிகளாக மட்டுமே வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், இவ்வழக்கில் பண மோசடியும் நடந்துள்ளதாக புகார்கள் வந்துள்ளதால், தெலங்கானா அமலாக்கப்பிரிவினர் மீண்டும் இவ்வழக்கை கையில் எடுத்துள்ளனர்.

கடந்த 31-ம் தேதி பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத்திற்கு சம்மன் அனுப்பியதை தொடர்ந்து நேற்று இவ்வழக்கில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள நடிகை ரகுல் ப்ரீத் சிங் உட்பட மீண்டும் பழைய பட்டியலில் உள்ள அனைவருக்கும் சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது. இவர்களிடம் வரும் செப்டம்பர் மாதம் 2-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை அமலாக்கப்பிரிவினர், கலால்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல நடிகைகள், நடிகர்கள், மற்றும் இயக்குனருக்கு மீண்டும் சம்மன் வந்திருப்பதால், தெலுங்கு திரைப்பட உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in