'புஷ்பா' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

'புஷ்பா' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
Updated on
1 min read

அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் 'புஷ்பா' படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் படம் 'புஷ்பா'. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் அல்லு அர்ஜுனுடன் நடித்து வருகிறார்கள்.

கரோனா அச்சுறுத்தலுக்குப் பிறகு முதல் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. ஆனால், இயக்குநர் சுகுமார் டெங்குவால் பாதிக்கப்பட்டதால் மீண்டும் படப்பிடிப்பு தடைப்பட்டது. தற்போது அவர் குணமாகிவிட்டதால், முழுவீச்சில் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

'புஷ்பா' படத்தின் முதல் பாகம் எப்போது வெளியாகும் என்பதே தெரியாமல் இருந்தது. தற்போது இதன் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது. இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் தொடங்கியதிலிருந்து பொங்கல் வரை எந்தவொரு படமும் வெளியாகாது என்பதால் இந்தத் தேதியைப் படக்குழு தேர்வு செய்திருப்பதாகத் தெரிகிறது.

'புஷ்பா' படத்தின் முதல் பாடல் ஆகஸ்ட் 13-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in