

உலக சினிமாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர் கமல் என்று ப்ரித்விராஜ் புகழாரம் சூட்டியுள்ளார்.
கரோனா அச்சுறுத்தல் தொடங்கிய சமயத்தில், 'ஆடுஜீவிதம்' படத்துக்காக ஜோர்டான் நாட்டில் இருந்தார் ப்ரித்விராஜ். அங்கிருந்து இந்தியா திரும்ப முடியாமல் தவித்தது படக்குழு. ஒருவழியாக மே மாத இறுதியில் இந்தியா திரும்பிய படக்குழுவினர், 14 நாட்கள் தனிமைக்குப் பிறகு குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிட்டு வருகிறார்கள்.
தற்போது படப்பிடிப்புகள் எதுவும் இல்லாத காரணத்தால், ப்ரித்விராஜ் தன் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிட்டு வருகிறார். மேலும், தனது உடலமைப்பிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். தனது சமூக வலைதளத்தில் ப்ரித்விராஜ் வெளியிடும் புகைப்படங்கள் பெரும் வைரலாகி வருகின்றன.
இதனிடையே, நேற்று (செப்டம்பர் 3) கமல் நடிப்பில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற 'மைக்கேல் மதன காமராஜன்' படத்தை மீண்டும் மனைவியுடன் பார்த்துள்ளார் ப்ரித்விராஜ்.
அந்தப் படம் தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"'மைக்கேல் மதன காமராஜன்' போல மிக மிகச் சில படங்களே உங்களை மகிழ்விக்கும். கமல்ஹாசன் உலக சினிமாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர். ஊர்வசி ஓர் ஆளுமை. என்றென்றும் க்ளாசிக்கான இப்படத்தை மனைவியுடன் பின்னிரவில் மீண்டும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்."
இவ்வாறு ப்ரித்விராஜ் தெரிவித்துள்ளார்.