

பாரதிராஜா இயக்கத்தில், ஸ்ரீதேவி, கமல்ஹாசன், ரஜினிகாந்த் நடித்த படம் '16 வயதினிலே'. 1977 ஆம் வருடம் வெளியான இந்தப் படம் 70களில் தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படமாகப் பார்க்கப்படுகிறது. இந்தப் படம் 1978 ஆம் ஆண்டு, ஸ்ரீதேவி, மோகன்பாபு மற்றும் சந்திரமோகன் நடிப்பில் 'பதரேள்ள வயசு' என்ற பெயரில் ராகேவேந்திர ராவ் இயக்கத்தில் மறு ஆக்கம் செய்யப்பட்டு தெலுங்கில் வெளியானது.
42 வருடங்கள் கழித்து, '16 வயதினிலே' தமிழ்ப் படத்தின் தெலுங்கு டப்பிங் வடிவத்தை டிஜிட்டலாக மாற்றி, 'நீகோஸம் நிரீக்ஷனா' என்ற பெயரில் வெளியிடும் முயற்சி நடந்து முடிந்துள்ளது. '16 வயதினிலே' படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஏ. ராஜ்கண்ணுவின் மகள் பாமா ராஜ்கண்ணு இந்த முயற்சியைச் செய்துள்ளார்.
'தி இந்து' ஆங்கிலம் இணையதளத்துக்கு அவர் அளித்த பேட்டியிலிருந்து....
'16 வயதினிலே' படத்தை தெலுங்கில் டப்பிங் செய்து அதை டிஜிட்டலாக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது?
திரைப்படங்களுக்கு சமுதாயத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் சக்தி உள்ளது. திரைப்படங்களில் காட்டப்படும் வன்முறை, பாலியல் குற்றங்கள் என்னைக் கடுமையாகப் பாதித்தன. ஒரு கண்ணியமான, தெளிவான படத்தை எடுக்க முடியும் என்று நிரூபிக்க நினைத்தேன். 40 வருடங்களுக்கு முன் என் அப்பா கோலிவுட்டில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தினார். அதை தெலுங்கு சினிமாவில் ஏற்படுத்த வேண்டும் என்று நான் நினைத்தேன்.
'16 வயதினிலே' படத்தை விட அதன் தெலுங்கு டப்பிங் வடிவம் 30 நிமிடங்கள் குறைவாக ஓடும் என்கிறார்களே?
பல்வேறு காரணங்களுக்காக நான் தமிழ் வடிவத்தில் 30 நிமிடங்கள் வரை நீக்கியுள்ளேன். நான் 'யெகோவாவின் சாட்சிகள்' மத நம்பிக்கை உடையவள். புகை பிடிப்பது, மது அருந்துவது உள்ளிட்ட காட்சிகளை வைக்க எனது மனசாட்சி இடம் தரவில்லை. கிராஃபிக்ஸைப் பயன்படுத்தி காட்சிகளில் இருக்கும் சிகரெட்டை நீக்கியுள்ளோம். நான் பணத்தை வீணடிப்பதாக என் படத்தொகுப்பாளர் சொன்னார். ரஜினிகாந்தின் கதாபாத்திரத் தன்மையை நான் மாற்றியது அவருக்குப் பிடிக்கவில்லை.
மேலும் மறைந்த ஸ்ரீதேவி கண்ணியத்துடன் காட்டப்பட வேண்டும் என்று நினைத்தேன். எனவே அவர் குளிப்பது போன்ற காட்சிகளை நீக்கிவிட்டேன். நானே இரண்டு முறை தணிக்கை செய்ததால் தணிக்கை அதிகாரிகள் படத்தில் ஒரு திருத்தத்தையும் கூறவில்லை.
'16 வயதினிலே', 'பதரேள்ள வயசு' என்கிற பெயரில் ஏற்கெனவே ரீமேக் செய்யப்பட்டதே?
ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடிப்பில் ஒரு புதிய படத்தைப் போலத்தான் 'நீகோஸம் நிரீக்ஷனா' உருவாகியுள்ளது. 'பதரேள்ள வயசு' படத்தின் முடிவும், இதுவும் வேறுபடும்.
இந்த முயற்சியைப் பற்றி உங்கள் தந்தை ராஜ்கண்ணுவிடம் பேசினீர்களா?
அவருக்கு 77 வயது. அதனால்தான் அவரது அலுவலகப் பொறுப்பை நான் எடுத்துக் கொண்டேன். கலாச்சாரம் கொண்ட பொழுதுபோக்கு தரும் புதிய நிறுவனத்தை என் பெயரில் பதிவு செய்ய அவர் அனுமதி கொடுத்தார். இந்தப் படத்தை 4 மொழிகளில் டப்பிங் செய்யத் திட்டமிட்டுள்ளோம்.
இதற்கு பாரதிராஜா ஒப்புக்கொண்டாரா?
ஒரு படத்தின் தயாரிப்பாளருக்கு அந்தப் படத்தில் கூடுதலாக காட்சிகள், சேர்க்க, நீக்க, டப்பிங் செய்ய, மறு வெளியீடு செய்ய சட்டரீதியான உரிமை உள்ளது. இதில் இயக்குநருக்கு உரிமை இல்லை. இத்தனைக்கும் நான் பாரதிராஜாவைச் சந்தித்து அவரது உதவியை நாடினேன். அவர் தயங்கியதால் நானே முடித்துவிட்டேன்.
இளையராஜா இசையமைத்த பாடல்களாக இல்லாமல் புதிதாக 5 பாடல்கள் வைத்திருக்கிறீர்கள். ஏன்?
'16 வயதினிலே', 'பதரேள்ள வயசு' இரண்டு திரைப்படங்களின் பாடல் உரிமைகளும் ஒரு இசை நிறுவனத்திடம் உள்ளது. உரிமைகளை வாங்க அவர்களை அணுகினேன். ஆனால் அதை உபயோகிக்க அனுமதிக்க மாட்டோம் என்றார்கள். சட்ட ரீதியான பிரச்சினைகளைத் தவிர்க்க, கேகே என்ற புதிய இசையமைப்பாளரைத் தேர்ந்தெடுத்தேன். பாடல்கள் ஆதித்யா மியூஸிக் யூடியூப் சேனலில் உள்ளது. ஆனால், இளையராஜாவின் பின்னணி இசையைத்தான் இதில் பயன்படுத்தியுள்ளேன்.
ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு இந்தப் படம் குறித்துத் தெரியுமா?
வழக்கமான டப்பிங் படத்தை விட மூன்று மடங்கு அதிக செலவானதால், ரஜினி எனக்குப் பணம் தந்து உதவினார். கோவிட்-19 பிரச்சினை காரணமாக படத்தின் பிரத்யேகக் காட்சி திரையிடலை ரத்து செய்ய வேண்டியதாகிவிட்டது. ஆனால், அவர்களுக்குத் தனிப்பட்ட முறையில் படத்தைத் திரையிட ஏற்பாடு செய்திருக்கிறேன்.
டிஜிட்டலாக புதுப்பிக்கும்போது என்னவெல்லாம் செய்தீர்கள்?
படத்தின் அசல் நெகடிவ்கள் 40 வருடங்களாக லேபில் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டது. அதைச் சுத்தம் செய்து, ஸ்கேன் செய்து, வண்ணங்களைக் கூட்டி, ஒவ்வொரு ஃப்ரேமாக புதுப்பித்து, சினிமாஸ்கோப்பில் மாற்றத் தொழில்நுட்பக் கலைஞர்கள் மிகவும் கஷ்டப்பட்டனர்.
டப்பிங்குக்குத் தேவையான ஐ டி ட்ராக் எங்களிடம் இல்லாமல் போனது மிகப்பெரிய சவாலாக ஆனது. எனவே மூன்று ஒலிப்பதிவுக் கலைஞர்கள், அசல் ஒலியைக் கேட்டு, அதை ஒவ்வொன்றாக மீண்டும் உருவாக்கி, சிறப்பு சப்தங்களைக் கலந்து, 5.1 தரத்துக்கு இணையாகக் கொண்டு வந்தார்கள். இன்னொரு முக்கிய அம்சம், அன்று நாயகனுக்கும், வில்லனுக்கும் பின்னணி பேசிய அதே நபர்களைத்தான் இன்றும் பேச வைத்திருக்கிறேன். ஆனால், உங்களுக்கு வித்தியாசமே தெரியாது.
படத்தின் வெளியீடு குறித்து?
1000 அரங்குகளில் படத்தை வெளியிடும் திட்டம் இருந்தது. ஆனால், இப்போது இருக்கும் கரோனா நெருக்கடியால் நேரடியாக டிஜிட்டலில் வெளியிடுவது குறித்துப் பரிசீலித்து வருகிறோம்.
- சங்கீதா தேவி ('தி இந்து' ஆங்கிலம்) | தமிழில்: கார்த்திக் கிருஷ்ணா