

'அலா வைகுந்தபுரம்லோ' படத்தைத் தொடர்ந்து த்ரிவிக்ரம் இயக்கவுள்ள அடுத்த படத்தில் நாயகனாக நடிக்க ஜூனியர் என்.டி.ஆர் ஒப்பந்தமாகியுள்ளார்.
த்ரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே, முரளி ஷர்மா, ஜெயராம், தபு, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அலா வைகுந்தபுரம்லோ'. சங்கராந்தி பண்டிகை விடுமுறைக்கு வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அல்லு அர்ஜுன் திரையுலக வாழ்வில் அதிக வசூலை ஈட்டிய படம் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது.
இந்தப் படத்துக்குப் பிறகு த்ரிவிக்ரம் இயக்கவுள்ள அடுத்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அதிகாரபூர்வமாக எந்தவொரு செய்தியும் வெளியாகாமல் இருந்தது.
இதனிடையே ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடித்துவரும் 'ஆர்.ஆர்.ஆர்' படம் 2021-ம் ஆண்டு சங்கராந்தி விடுமுறைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பால் ஜூனியர் என்.டி.ஆர் படத்துக்கு முன்பாக புதிய படமொன்றை த்ரிவிக்ரம் இயக்கவுள்ளதாகச் செய்திகள் வெளியாகின. இதனால், த்ரிவிக்ரமின் அடுத்தப் படம் குறித்து குழப்பம் உண்டானது.
அனைத்து குழப்பத்தையும் தீர்க்கும் வகையில், த்ரிவிக்ரம் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவுள்ளதை அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டார்கள். மே மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
தவறவிடாதீர்