

'96' படத்தின் தெலுங்கு ரீமேக் தான் 'ஜானு'. தமிழில் இயக்கிய பிரேம்குமாரே தெலுங்கிலும் இயக்கியிருக்கிறார். விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் சர்வானந்த், த்ரிஷா கதாபாத்திரத்தில் சமந்தா, பக்ஸ் கதாபாத்திரத்தில் வெண்ணிலா கிஷோர், ஆடுகளம் முருகதாஸ் கதாபாத்திரத்தில் ரமேஷ், தேவதர்ஷினி கதாபாத்திரத்தில் சரண்யா பிரதீப், கெளரி கிஷன் கதாபாத்திரத்தில் அவரே நடித்துள்ளார். மற்றும் ஆதித்யா பாஸ்கர் கதாபாத்திரத்தில் சாய் கிரண் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.
தமிழில் எடுத்த கதையை காட்சிக்கு காட்சி மாற்றாமல் அப்படியே எடுத்துள்ளார் பிரேம்குமார். பள்ளி நண்பர்கள் அனைவரும் மீண்டும் ரீ-யூனியனில் சந்திக்கிறார்கள். அப்போது சர்வானந்த் பள்ளிக் காலத்தில் காதலித்த சமந்தாவும் வருகிறார். இருவரும் சந்திக்கும் போது என்னவானது, இருவரின் காதல் பிரிவு ஏன் என்பது தான் கதை.
'96' படத்தைப் பார்த்தவர்களுக்கு, இந்தப் படத்தைப் பார்த்தால் கண்டிப்பாக சர்வானந்த் நடிப்பு அவ்வளவாகப் பிடிக்காது. '96' படத்தில் விஜய் சேதுபதி ரொம்பவே எதார்த்தமாக நடித்திருப்பார். அதிலும் கொஞ்சம் கரடு முரடானவர், காதலியைப் பார்த்தவுடன் எப்படி ஏங்குகிறார் என்பதைக் கண்பார்வையிலே பார்வையாளர்களுக்குக் கடத்தியிருப்பார். ஆனால், 'ஜானு' படத்தில் சர்வானந்த் நடிப்பு நன்றாக இருந்தாலும், இரண்டு படங்களையும் ஒப்பிட்டு பார்க்கும்போது ரொம்பவே சுமார் தான். தன் நெஞ்சில் த்ரிஷா கை வைக்கும் போது, விஜய் சேதுபதி ஒரு நடிப்பை வழங்கியிருப்பார். அதெல்லாம் 'ஜானு' படத்தில் சுத்தமாக மிஸ்ஸிங்.
சமந்தா தனது பங்கைக் கச்சிதமாகச் செய்துள்ளார். த்ரிஷாவின் நடிப்புடன் ஒப்பிட்டுப் பார்த்தால் கண்டிப்பாக த்ரிஷா தான் நம்பர் ஓன். ஏனென்றால், கண்ணாலேயே பல விஷயங்களை மிக எளிதாகக் கடந்தியிருப்பார். 'ஜானு' படத்தில் சமந்தா மிகவும் வயது குறைந்தவராகத் தெரிகிறார். அது தான் பிரச்சினை. சில காட்சிகளில் அழும்போது ஓவர் ஆக்டிங் செய்திருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. வெண்ணிலா கிஷோர், ரமேஷ், சரண்யா பிரதீப் ஆகியோர் தங்களுடைய பங்கினை சிறப்பாக அளித்துள்ளனர். மூவரில் சரண்யா ப்ரதீப்பின் நடிப்பு கச்சிதம்.
பள்ளிக் காலத்துக் காதலர்களாக சாய் கிரண் குமார் மற்றும் கெளரி கிஷன். சர்வானந்த் - சாய் கிரண்குமார் இருவருமே அப்படியே ஒன்று போல் இருப்பது கதாபாத்திரத்தின் நம்பகத்தன்மை அதிகரிக்கிறது. ஆனால், சாய் கிரண் குமார் சில காட்சிகள் அற்புதமாக நடித்திருக்கிறார். ஆனால், கல்லூரியில் கெளரி கிஷனைப் பார்க்கக் காத்திருக்கும் காட்சிகளில் எல்லாம் கொஞ்சம் ஓவர் ஆக்டிங் தான். '96' படத்துக்கு கெளரி கிஷன் எப்படி அழகு சேர்த்தாரோ அதை 'ஜானு' படத்திலும் செவ்வனே செய்திருக்கிறார்.
'96' படத்தில் த்ரிஷாவுக்கு டப்பிங் பேசிய சின்மயி தான், 'ஜானு' படத்தில் சமந்தாவுக்கும் பேசியிருக்கிறார். செம பொருத்தம். '96' படத்துக்கு முதல் ஹீரோ கோவிந்த் வசந்தா தான். அந்த இசையை சில இடங்களில் சின்ன மாற்றம் செய்து அப்படியே உபயோகப்படுத்தியிருக்கிறார். இதிலும் காதல் காட்சிகளுக்கு தன் இசையால் உயிரூட்டியிருக்கிறார். கண்டிப்பாக இந்தப் படத்துக்குப் பிறகு தெலுங்கில் அவருக்கு வாய்ப்புகள் வரும். '96' படத்துக்கு இரண்டு ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் மகேந்திரன் ஜெயராஜு. அவர் தான் 'ஜானு'வுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஓவராக லைட்ஸ், ஃபில்டர் எல்லாம் போட்டு எந்தவொரு காட்சியையும் காட்சிப்படுத்தாமல், ரொம்பவே எதார்த்தமாக ஒளிப்பதிவில் விளையாடி இருக்கிறார்.
'96' படத்தில் காதலின் வலியை எப்படி பார்வையாளர்களுக்குக் கடத்தினார்களோ, அதை 'ஜானு' படத்திலும் உணர முடிகிறது. அது தான் இந்தப் படத்தின் பெரிய வெற்றி என்று சொல்லலாம். சில படங்கள் ரீமேக் பண்ணும்போது அதை தவறவிட்டுவிடுவார்கள். ஆனால், இயக்குநர் பிரேம்குமாரே இதையும் இயக்கியிருப்பதால், அதைக் கச்சிதமாகக் கொண்டு வந்திருக்கிறார். '96' படத்தில் ராம் - ஜானு இருவரும் சேருவார்களா என்று இருந்த டென்ஷனை, இந்தப் படத்திலும் க்ளைமாக்ஸ் வரை நீட்டித்திருப்பது செம.
இரண்டு படத்திலுமே படம் முழுக்கவே காதல், காதல், காதல் மட்டுமே. ஆகையால் கதை ரொம்பவே நிதானமாக நகர்கிறது. கமர்ஷியல் பட ரசிகர்களுக்கு இந்தப் படம் ரொம்பவே போரடிக்கலாம். அதேபோல் படத்தில் முதல் பாதியில் கிடைக்கும் அழுத்தம், இரண்டாம் பாதியில் கொஞ்சம் குறைந்துவிடுகிறது.
'96' பட ரசிகர்கள் இந்தப் படத்தைப் பார்த்தால் கண்டிப்பாக '96' தான் செம படம் என நினைக்கலாம். ஆனால், '96' படத்தைப் பார்க்காதவர்கள் 'ஜானு' படத்தைப் பார்த்தால் கண்டிப்பாகக் காதலில் நனையலாம். மீண்டும் ஒரு ரீ யூனியன் ப்ளான் பண்ணலாம். இரண்டு படங்களைப் பார்க்கும் போது, இரண்டு படங்களிலும் ஜெயித்திருப்பது என்னவோ கண்டிப்பாக இயக்குநர் பிரேம்குமார் தான்.
தவறவிடாதீர்