'அசுரன்' ரீமேக்கில் அமலாபால்

'அசுரன்' ரீமேக்கில் அமலாபால்

Published on

'அசுரன்' படத்தின் தெலுங்கு ரீமேக்கில், அம்மு அபிராமி கதாபாத்திரத்தில் அமலாபால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், பிரகாஷ்ராஜ், பசுபதி, கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அசுரன்'. இந்தப் படத்துக்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பால், தற்போது இதன் தெலுங்கு ரீமேக் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தாணுவும் தெலுங்கு ரீமேக்கைத் தயாரித்து வருகிறார். ஸ்ரீகாந்த் அட்டலா இயக்கி வரும் இந்தப் படத்தில் தனுஷ் கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் நடித்து வருகிறார்.

மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தில் ப்ரியாமணி நடித்து வருகிறார். கென் கருணாஸ் கதாபாத்திரத்தில் அவரே நடிக்கிறார். 'நாராப்பா' என்ற தலைப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில் அம்மு அபிராமி கதாபாத்திரத்தில் யார் நடிக்க இருப்பது என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில், தற்போது அந்தக் கதாபாத்திரத்தில் அமலாபால் நடிப்பது உறுதியாகியுள்ளது. சின்ன கதாபாத்திரம்தான் என்றாலும், மிகவும் வலுவானது என்பதால் உடனடியாக ஒப்புக் கொண்டுள்ளார் அமலாபால்.

தற்போது தமிழ்நாட்டில் முக்கியமான சண்டைக் காட்சியைப் படமாக்கி வருகிறது படக்குழு. அதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. ஒரே கட்டமாகப் படப்பிடிப்பை முடித்து, கோடை விடுமுறைக்குப் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

தவறவிடாதீர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in