

விஜய் நடிப்பில் வெளியான 'தெறி' படத்தின் தெலுங்கு ரீமேக் தொடர்ச்சியாக இழுபறியில் இருக்கிறது.
விஜய் - அட்லி முதன் முறையாக இணைந்து பணிபுரிந்த படம் 'தெறி'. 2016-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதில் சமந்தா, ஏமி ஜாக்சன், மறைந்த இயக்குநர் மகேந்திரன், 'நான் கடவுள்' ராஜேந்திரன், ராதிகா, அழகம் பெருமாள் உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்தனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்தார்.
இந்தப் படம் கன்னடம் மற்றும் அசாமி மொழியில் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பைப் பெற்றது. ஆனால், முதலிலேயே தெலுங்கு ரீமேக் குறித்துத்தான் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது. பலமுறை இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தை வரை சென்றும் தொடங்கப்படாமலேயே இருந்தது.
'தெறி' படத்தை ரீமேக் செய்ய இயக்குநர் சந்தோஷ் ஸ்ரீனிவாஸ் பல முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பவன் கல்யாண், ரவி தேஜா மற்றும் கல்யாண் ராம் எனப் பேசி இறுதியாக ரவி தேஜா உடன் படப்பிடிப்பு வரை சென்று பின்பு கைவிடப்பட்டது. தற்போது அந்த முயற்சியைக் கைவிட்டு, பெல்லம்கொண்டா சாய் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.
இயக்குநர் கோபிசந்த் மாலினேனி - ரவி தேஜா இணைப்பில் உருவாகி வரும் 'க்ராக்' படமும் 'தெறி' ரீமேக் அல்ல என்று அறிவித்துவிட்டது படக்குழு. இதன் மூலம், 'தெறி' ரீமேக் இன்னும் தொடங்கப்படாமல் இழுபறியில் இருப்பது தெளிவாகிறது.