ஜூனியர் என்.டி.ஆருடன் இணையும் அட்லீ?

ஜூனியர் என்.டி.ஆருடன் இணையும் அட்லீ?
Updated on
1 min read

ஷாருக் கானைத் தொடர்ந்து ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கும் தெலுங்குப் படத்தை அட்லீ இயக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

அட்லீ இயக்கத்தில் வருகிற வெள்ளிக்கிழமை ரிலீஸாகவுள்ள படம் ‘பிகில்’. விஜய் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படம், விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள மூன்றாவது படமாகும். அப்பா - மகன் என இரண்டு வேடங்களில் இந்தப் படத்தில் நடித்துள்ளார் விஜய்.

விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்க, ‘பரியேறும் பெருமாள்’ கதிர், ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு, இந்துஜா, ரெபா மோனிகா ஜான், வர்ஷா பொல்லம்மா என ஏராளமான நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், கால்பந்து பயிற்சியாளராக விஜய் நடித்துள்ளார். மிகப் பிரமாண்டமான அரங்குகள் அமைத்து 180 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

ஏஜிஎஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அனைத்துப் பாடல்களையும் விவேக் எழுதியுள்ளார். தமிழகத்தில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்தப் படம் ரிலீஸாகிறது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, ஷாருக் கானை வைத்து இந்தியில் ஒரு படத்தை இயக்குகிறார் அட்லீ என ஏற்கெனவே தகவல் வெளியானது. காரணம், ‘பிகில்’ படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, திடீரென ஒருநாள் அட்லீயின் அலுவலகத்துக்கு வந்து அவரைச் சந்தித்தார் ஷாருக் கான். இதனால், ‘பிகில்’ படத்தில் ஷாருக் கான் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என்றனர். ஆனால், அது உண்மையாகவில்லை.

அதைத் தொடர்ந்து, சென்னையில் நடைபெற்ற ஐபில் போட்டியில், ஷாருக் கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடியபோது, ஷாருக் கானுடன் சேர்ந்து அந்தப் போட்டியைக் கண்டு ரசித்தார் அட்லீ. இதன்மூலம் ஷாருக் கானை வைத்து அட்லீ படம் இயக்கப் போகிறார் என்ற தகவல் வெளியானது. அட்லீ இயக்கத்தில் வெளியான ‘தெறி’ அல்லது ‘மெர்சல்’ படத்தின் ரீமேக்காக இது இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஷாருக் கானின் ரெட் சில்லீஸ் என்டெர்டெயின்மென்ட் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. அடுத்த வருடம் (2020) படம் தொடங்கப்பட்டு, அந்த வருட இறுதியில் படம் வெளியாகும் எனத் தெரிகிறது.

இந்நிலையில், ஷாருக் கானைத் தொடர்ந்து ஜூனியர் என்.டி.ஆரை வைத்து ஒரு தெலுங்குப் படத்தை அட்லீ இயக்கப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ‘பிகில்’ படத்துக்கான தெலுங்குப் பத்திரிகையாளர்கள் சந்திப்பில், இதுகுறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றதாக அட்லீ தெரிவித்துள்ளார். ஆனால், இன்னும் அதிகாரபூர்வமாக முடிவாகவில்லை எனத் தெரிகிறது.

ஒருவேளை ஜூனியர் என்.டி.ஆர். - அட்லீ கூட்டணி உறுதியானால், 2021-ம் ஆண்டு இந்தப் படம் தொடங்கலாம் என்கிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in