10 நாட்களில் ரூ. 400 கோடி வசூல்: சாதனை படைத்த ‘சாஹோ’
பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘சாஹோ’ படம், உலக அளவில் 400 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்துள்ளது.
சுஜித் இயக்கத்தில் பிரபாஸ், ஷ்ரத்தா கபூர், நீல் நிதின் முகேஷ், அருண் விஜய், ஜாக்கி ஷெராஃப், மந்த்ரா பேடி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘சாஹோ’. யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் ஒரே சமயத்தில் வெளியிடப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி வெளியான இந்தப் படம், விமர்சன ரீதியாகப் பெரும் பின்னடைவைச் சந்தித்தது. பல்வேறு முன்னணி விமர்சகர்கள் கூட இந்தப் படத்துக்கு எதிர்மறையான விமர்சனங்களையே தந்தனர். ஆனால், வசூல் ரீதியாக இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
தொடர் விடுமுறை என்பதால், ‘சாஹோ’ வெளியான 4 நாட்களில் 330 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. ஆனால், தமிழகத்தின் வசூல் நிலவரத்தை எடுத்துக் கொண்டால், இந்தப் படம் படுதோல்வியைச் சந்தித்துள்ளதாக விநியோகஸ்தர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், படம் வெளியாகி 10 நாட்களில், உலகம் முழுவதும் 400 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக அளவில் அதிகமாக வசூலித்த 4-வது தென்னிந்தியப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ‘பாகுபலி’, ‘பாகுபலி 2’, ‘2.0’ ஆகிய படங்கள் முதல் மூன்று இடங்களில் உள்ளன.
350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்தப் படம் தயாரானது நினைவுகூரத்தக்கது.
